யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்புப் பகுதியின் களஞ்சிய சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பொருள்கள் கையாடல் குறித்த விசாரணைகளில் பல திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
கையாடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் மூன்றரை இலட்சம் என சம்பந்தப்பட்ட பகுதியின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அறிக்கையிட்டிருந்தாலும், அது இரண்டு மில்லியன்களைக் கடந்திருக்கலாம் எனப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதனால் முறையான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கையாடல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கெனப் பேரவையினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் உறுப்பினர்கள் இருவர் விசாரணைகளில் பங்குபற்றாமல் வெளியேறியிருப்பதையடுத்து, கையாடல் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்குப் புதிதாக இரண்டு உறுப்பினர்களைப் பல்கலைக் கழகப் பேரவை நியமித்துள்ளது.
கையாடல் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகுதியுடன் நேரடித் தொடர்பு இல்லாத உறுப்பினர்களைக் கொண்டு பூர்வாங்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக பராமரிப்புப் பகுதியின் களஞ்சியத்தில் ரூபா 3 லட்சத்து 75 ஆயிரம் பெறுமதியான பொருட்கள் காணாமல் போயுள்ளதாக பராமரிப்புப் பகுதியின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளால் பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டதுடன், அவ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பூர்வாங்க விசாரணைகளின் அடிப்படையில் களஞ்சிய சாலைப் பணியாளர்கள் சிலர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுமிருந்தது.
எனினும் சம்பவம் தொடர்பில் அதிகாரிகளின் தவறை மறைப்பதற்காக அப்பாவித் தொழிலாளரகள் மீது குற்றஞ்சாட்டப்படுவதாகவும், சம்பவத்துடன் நேரடித் தொடர்பில்லாதவர்களே பூர்வாங்க விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டி வந்தன. இது தொடர்பாகப் பல்கலைக கழகப் பேரவை உறுப்பினர்களுக்கும் தொழிற்சங்கங்கள் தெரியப்படுத்தியிருந்தன.
இதனிடையே, கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி கூடிய பேரவை, பூர்வாங்க விசாரணை அறிக்கையின் அடிப்படையில் களஞ்சிய சாலைப் பொறுப்பாளர் ஒருவரை விசாரணைகள் முடிவுறும் வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தியதுடன், சம்பவம் தொடர்பில் அவருக்குக் குற்றப்பத்திரிகையையும் அனுப்பியிருந்தது. முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கென மூவர் கொண்ட குழுவையும் நியமித்திருந்தது.
குற்றஞ் சாட்டப்பட்ட களஞ்சிசாலைப் பணியாளர் தன் மீதான குற்றச் சாட்டுகளை மறுத்திருக்கிறார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளிலும் இவர் தனது பக்கக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். கோப்பாய் காவற்துறையினர் தனியாக விசாரணைகளைத் தொடர்கின்றனர்.
விசாரணைக் குழுவுக்குப் பேரவையினால் நியமிக்கப் பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மே மாதம் 08 திகதியிடப்பட்டு 10 ஆம் திகதி உரியவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. காலந் தாழ்த்திக் கடிதம் அனுப்பப்பட்ட காரணத்தால், தன்னால் விசாரணைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும், மே 12 ஆம் திகதி தான் ஐக்கிய இராச்சியத்துக்குப் பயணப்பட இருப்பதனால் விசாரணைக் குழுவில் இருந்து தன்னை விடுவிக்குமாறும் அந்த அதிகாரி பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு அறிவித்திருந்தார்.
அதே நேரம் விசாரணைக்குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டவர் வேறு காரணங்களினால் விசாரணைக் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்து விலகிக் கொண்டார்
இதனையடுத்து கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் தலைமையில், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் ஒருவரையும், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் பிரதம கணக்காளரையும் உறுப்பினர்களாகக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவத்துடன் நேரடியாகச் சம்பந்தப்படாத இருவர் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பராமரிப்புப் பகுதியின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பூர்வாங்க விசாரணை வறிதானதாகக் கருதப்படுகிறது.
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பூர்வாங்க விசாரணைகளின் போதும், அதன் அடிப்படையில் தொடரப்படவுள்ள முறையான விசாரணைகளின் முடிவில் இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்பதோடு இக் கையாடலுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரிகள் சிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.