“நான் கஷ்டத்தில் விழுந்த நேரத்தில், அரசாங்கம் என்னை காப்பற்றவில்லை. அதனால் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தேன்” என்று தங்கம் கடத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட புத்தளம் மாவட்ட எம்.பியான அலி சப்ரி ரஹிம் தெரிவித்தார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை விலக்குவதற்கான பிரேரணை மீதான வாக்களிப்பின் போது அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சட்டவிரோதமான முறையில் மூன்றரை கிலோகிராம் தங்கத்தை எடுத்துவந்தபோது சுங்கத்தினரால் கைப்பற்றப்பட்டதன் பின்னர் அதற்கான தண்டப்பணத்தை செலுத்திவிட்டு அவர், பாராளுமன்றத்துக்கு புதன்கிழமை (24) வருகைதந்தார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அலி சப்ரி ரஹிம் எம்.பி, ஜனக்க ரத்நாயக்க எனதுக்கு எதிராக எதனையும் செய்யவில்லை.
அது நான் செய்த குற்றமல்ல. என்னுடைய பயணப்பொதியை என்னுடைய சீடனே எடுத்துவந்தார். எனினும், ஊடகங்களில் என்மீதே குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பில் நான், ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்தேன். பிரதமருக்கு கூறினேன். எல்லோரும் பார்ப்பதாக கூறினர். எனினும், எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்யாது 75 இலட்சம் ரூபாய் தண்டம் செலுத்தினேன். அதன் பின்னரே வெளியே வந்தேன். அதனால்தான் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தேன் என்றார்.
என்னுடைய சீடன்தான் எனது பயணப்பொதியை பொதிச்செய்தார். என்னுடைய பயணப்பொதிக்குள் அதனை போட்டுள்ளார். அவர் செய்த தவறுக்காக இறுதியில் நான் சிக்கிக்கொண்டேன்.
சுங்கத் திணைக்களத்தினர். அவரையும் கைது செய்தனர். எனினும், நானே தண்டப்பணத்தை செலுத்தினேன்.
இவ்வாறான அசாதாரணம் எனக்கு இழைக்கப்பட்டபோது. அரசாங்கத்துடன் இருந்து என்ன பயன். இவ்வாறான சந்தர்ப்பங்களில் என்னை காப்பாற்றாவிட்டால், அரசாங்கத்துடன் இருந்து பயனில்லை. அதனால்தான், அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தேன் என்றும் அலி சப்ரி ரஹிம் எம்.பி தெரிவித்தார்.