நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அலி சப்ரி ரஹீமை இராஜினாமா செய்யுமாறு கோருவதற்கான தீர்மானமொன்றை கொண்டு வருவது தொடர்பில், நாடாளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
நேற்று (26.05.23) மாலை நடைபெற்ற நாடாளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழுவில், கட்சித் தலைவர்களால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்க்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டிற்கு அமைய, அலி சப்ரி ரஹீமை சுய விருப்பத்தின் பேரில் விலகிச்செல்லுமாறு முன்வைக்கப்பட்ட யோசனையை எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்துள்ளார்.
தற்போதுள்ள விதிமுறைகளுக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பதவி நீக்கம் செய்ய முடியாது என்பதால், இந்த தீர்மானத்தை எடுத்ததாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை சபாநாயகரின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுப்பது தொடர்பிலும் இன்று கூடிய நாடாளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்தை கொள்வனவு செய்வதற்காக அந்நியச்செலாவணியை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் நளின் ஹேவகே வலியுறுத்தினார்.