Home இலங்கை மகாவலி அபிவிருத்தி – 37 தமிழ் கிராமங்கள் பறிபோகிறது?

மகாவலி அபிவிருத்தி – 37 தமிழ் கிராமங்கள் பறிபோகிறது?

by admin

மகாவலி அதிகார சபையின் செயல்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் கொண்டுவருவதற்கும் தமிழர்களை இன ரீதியாக இல்லாமல் செய்வதற்குமான இன அழிப்பின் நீண்ட கால தந்திரமான செயற்பாடு தான் இந்த மகாவலியின் செயல்பாடு என்றும் இதை முழுமையாக கண்டிப்பதாகவும் முழுமையாக எதிர்ப்பதாகவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் நேற்று  (28.05.23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மகாவலி அதிகார சபையால் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் 1988 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் 14 கிராம அலுவலர் பிரிவுகள் அபகரிக்கப்பட்டு யுத்தத்தில் மக்கள் இடம் பெயர்ந்த போது முழுமையாக அங்கு சிங்கள குடியேற்றங்களை நிறுவிவெலி ஓயா என்ற ஒரு புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வடக்கு கிழக்கை பிரிக்கின்ற நோக்கத்துக்காக இந்த மகாவலி அதிகார சபை புதிய ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கி பிற்பாடு கொக்கிளாய் முதல் செம்மலை வரை இருக்கின்ற 6 கிராம சேவகர் பிரிவுகளை அபகரிக்க முயற்சி எடுத்த போது எங்களுடைய தொடர் அழுத்தம் காரணமாக தற்காலிகமாக அந்த திட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

மகாவலி என்பது தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களையும் சிங்கள இனப்பரம்பலையும் செய்வதற்காக அரசாங்கத்தால் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு செயல்பாடு.

அந்த வகையில் தற்பொழுது மகாவலி “J” வலயம் என்ற ஒன்றை புதிதாக உருவாக்குவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கும் 7 கிராம அலுவலர் பிரிவுகளும், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் இருக்கின்ற 15 கிராம அலுவலர்கள் பிரிவுகளும், மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 15 கிராம அலுவலர் பிரிவுகளும் உள்ளடங்களாக மொத்தம் 37 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி மகாவலி அதிகார சபை புதிய வர்த்தமானி அறிவித்தல் செய்வதற்காக பிரதேச செயலகங்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது .

இவ்விடயத்தை எதிர்த்து நான் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை முன் வைத்திருக்கிறேன். அதற்கு நீர்ப்பாசன அமைச்சர் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது பதில் அளிப்பதாக கூறியிருக்கிறார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பாலியாறு, அந்தோனியார்புரம், ஆத்திமோட்டை, இலுப்பக்கடவை, கள்ளியடி, கூராய், கோவில் குளம், காயா நகர், பெரிய மடு கிழக்கு, பெரிய மடு தெற்கு, பள்ளமடு, விடத்தல்தீவு கிழக்கு, விடத்தல் தீவு மேற்கு, விடத்தல் தீவு வடக்கு, விடத்தல்தீவு மத்தி ஆகிய கிராமங்களையும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் அனிச்சங்குளம், பாரதி நகர், புகழேந்தி நகர் திருநகர், ஜோக புரம் மத்தி, ஜோக புரம் கிழக்கு, ஜோக புரம் மேற்கு கிராமங்களும், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் அம்பாள் புரம், கரும்புள்ளையான், கொல்லி விலாங்குளம், மூன்று முறிப்பு, நெட்டாங்கண்டல், கொட்டருத்த குளம், பாலிநகர், பாண்டியன் குளம், பொன் நகர், பூவரசங்குளம், செல்வபுரம், சீராட்டி குளம், சிவபுரம் வன்னி விளாங்குளம், விநாயகபுரம் ஆகிய 37 கிராம அலுவலர் பிரிவுகளையும் “J” வலயத்தின் ஊடாக மகாவலி அதிகார சபையில் கீழ் கொண்டு வந்து இந்த நிலங்களில் இருக்கும் குளங்களின் கீழ் காணப்படுகின்ற வன இலாக திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் கீழ் உள்ள காணிகளை அபகரித்து அதன் மூலம் சிங்கள மக்களுக்கு அதை நீண்ட கால குத்தகை வழங்குவதோ அல்லது அந்த பிரதேசத்தில் சிங்கள மக்களை குடியேற்றுவதுதான் மிக வேகமாக மகாவலி அதிகார சபை செய்யப்படுகின்றது.

மகாவலி L வலயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1988 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நிர்ணயம் செய்யப்பட்டது. இன்றைக்கு 35 வருடங்கள் கடந்தும் மகாவலி தண்ணீர் இன்னும் வரவில்லை.

மகாவலி தண்ணீர் அங்கு வராமல் இருக்கும் போது அங்கு புதிய சிங்கள பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டு சிங்கள மக்களும் குடியேற்றப்பட்டு மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள்.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் இந்த திட்டம் என்பது தமிழர்களுடைய இன பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை இங்கு கொண்டுவருவதற்கும் தமிழர்களை இனரீதியாக இல்லாமல் செய்வதற்கு இன அழிப்பின் ஒரு நீண்ட கால தந்திரமான செயல்பாடுதான் இந்த மகாவலி அதிகார சபையின் செயல்பாடு.

இதை முழுமையாக நாங்கள் கண்டிக்கின்றோம். முழுமையாக எதிர்க்கின்றோம். இதை நடைமுறைப்படுத்த விடாமல் செய்வதற்கு பல முயற்சி செய்துள்ளேன். பாராளுமன்றத்தில் பிரேரணையை முன் வைத்துள்ளேன். அதையும் மீறி ஜனாதிபதியை சந்திப்பதற்காக நான் அனுமதி கேட்டிருக்கின்றேன். அவரிடம் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்துவேன்.

அதையும் மீறி மகாவலி “J” வலயம் மகாவலி அதிகார சபையினால் வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்டால் வெகுஜன போராட்டத்தின் ஊடாக மக்கள் போராட்டத்தின் ஊடாக முழுமையாக முல்லைத்தீவு, மன்னார் மக்கள் இணைந்ததை இத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More