லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரித்தானியாவில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.
யுத்தத்தினால் நலிவடைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தி, ஆதரவற்றோரின் வாழ்வை வளப்படுத்தல், அரசியல் தீர்வு என்பன சமாந்தரமாக நகர்த்தப்படல் வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ள லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அது குறித்த தனது நிலைப்பாட்டை ஜனாதிபதியுடனான உரையாடலில் வலியுறுத்தி உள்ளார்.
அதன் அடிப்படையில் ஆளும் அரசாங்கமும், ஜனாதிபதியும் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்கான ஆரம்பமாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பது குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.
இதனை நிறைவேற்றுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான சட்ட நடைமுறைகளை துரிதப்படுத்துவதற்கும் இணங்கியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் மேற்கொண்ட சந்திப்புக்களில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து, லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.
அத்துடன் நின்றுவிடாது, இலங்கை அரசாங்கத்தினால் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்ட 5 பேருக்கும், இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 10 பேருக்கும், தற்போது 3 ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 13 பேருமாக 28 அரசியல் கைதிகளுக்கும் தலா 25 லட்சம் – (7கோடி ரூபாய்) லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஊடாக வழங்கி வைத்துள்ளார்.
தமது வாழ்வை சிறைகளில் தொலைத்த அரசியல் கைதிகளுக்கு தனி ஒருவரால் இதுவரை வழங்கப்பட்ட அதி கூடிய உதவியாக இந்த உதவி அமைந்துள்ளது என சில ஆய்வாளர்கள் தமது கட்டுரைகளில் கூட்டிக்காட்டியிருந்தார்கள்.
யுத்தம் காவு கொண்ட பிரதேசங்களையும், மக்களின் வாழ்வையும் கட்டி எழுப்புவதற்கு அரசியல் தீர்வை நோக்கி பயணிப்பது அவசியம். அந்த அரசியல் தீர்வைப் பெறுவதற்கும், அதனோடு சமாந்தரமாக – அப்பிரதேசங்களின் அபிவிருத்தியையும், நாளாந்தம் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு, ஆளும் அரசாங்கங்களோடும், அவ்வரசாங்கங்களின் தலைவர்களோடுமே பேசவேண்டியது அவசியம் என்ற அடிப்படையில் தனது இந்த சந்திப்புகள் தொடர்வதாக, லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவனருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் லைக்கா குழுமத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி, லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் பாரியாரும் லைக்கா ஹெல்த்தின் தலைவருமான பிரேமா சுபாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.