தென் கொரியாவின் பிரபல பொப் பாடகர் சோய் சுங்-பாங் 32 ஆவது வயதில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் கொரியாவின் தெற்கு சியோலில் உள்ள யோக்சம்-டாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல கொரிய பாடகரான இவர், கடந்த 2011ஆம் ஆண்டு கொரியாவின் காட்டேலண்டில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து பிரபலம் அடைந்தார்.
பின்னர், கொரிய லேபிள் பாங்பாங் என்ற நிறுவனத்துடன் இணைந்து பாடுவதற்கு ஒப்பந்தம் பெற்றார். தொடர்ந்து இணையதள உலகில் கோலோச்சி வந்த அவர், தன்னுடைய வறுமை நிலையைக் கடந்து இணையத்தில் சாதித்த தருணங்கள் குறித்த நினைவலைகளை வீடியோவாக வெளியிட்டார்.
கடந்த 2021ஆம் ஆண்டு அவருக்கு, சோதனையான ஆண்டாக அமைந்தது என தகவல்கள் வெளியாகின. அவர் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதாகவும், சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.
இது, அவருடைய வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர், அது வதந்தி எனத் தெரிய வந்தது. இந்த நிலையில், அவர், நேற்று முன்தினம் காலை 9.41 மணி அளவில் தற்கொலை செய்துகொண்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, “அவர் தனது யூடியூப் அலைவரிசையில் பதிவுசெய்யப்பட்ட பதிவாலோ அல்லது அவருக்கு வீட்டில் இருந்த நெருக்கடியான சூழ்நிலைகளாலோ அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவற்துறையினர் கருதுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சோய் சுங்-பாங், தனது தவறுகளை ஒப்புக்கொண்டார் எனவும், அவர் பெற்ற அட்வான்ஸ் தொகையை திருப்பித் தர உறுதியளித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அவர் ஏதோ ஒரு மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
காவற்துறையினர் கைப்பற்றி இருக்கும் அவர் எழுதிய குறிப்பு ஒன்றில், “என் முட்டாள்தனமான தவறால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுதப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.