குஜராத்தில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல விரும்பும் நபர்கள் எப்படி சிரமங்களுக்குள்ளாகின்றனா் என்பதற்கு அண்மைய உதாரணமாக ஆமதாபாத்தைச் சேர்ந்த தம்பதி மாறியுள்ளனர்.
ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்கா செல்ல விரும்பிய ஆமதாபாத்தில் வசிக்கும் பங்கஜ் படேலும் அவரது மனைவி நிஷா படேலும் ஈரானில் கடத்தப்பட்டதாக காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து , குஜராத் அரசு, ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் காவல்துறையின் முயற்சியின் உதவியுடன், இவா்கள் இறுதியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தம்பதியினர் ஈரானில் இருந்து விமானம் மூலம் துருக்கிக்கு சென்று பின்னர் புதன்கிழமை பிற்பகல் குஜராத்தை அடைந்துள்ளனர், தற்போது காந்திநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட பங்கஜ் படேலின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சிகிச்சையளித்துவரும் மருத்துவர் தெரிவித்துள்ளார். நீரிழப்பு, உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் மன அதிர்ச்சியால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். கர்ப்பமாக இருக்கும் பங்கஜ் படேலின் மனைவி நிஷாபென் படேலின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தம்பதியினர் சட்டவிரோதமாக அமெரிக்கா செல்வதற்காக . ஈரான் சென்றபோது ஒரு கும்பல் இவர்களை பிணைக்கைதியாக பிடித்ததோடு விடுவிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆமதாபாத்தில் உள்ள கிருஷ்ணாநகர் காவல் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து காவல்துறையினா் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
காவல்துறையில் வழங்கப்பட்டிருந்த முறைப்பாட்டில் , பங்கஜின் முதுகில் ஒரு நபர் பிளேட் மூலம் வெட்டுவது போன்று வீடியோ எடுக்கப்பட்டு குடும்பத்தினருக்கு அனுப்பட்டுள்ளதுடன் அவா்களை விடுதலை செய்ய வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்றும் தங்களிடம் சிக்கிய பெண்ணை அநாகரீகமாக வீடியோ எடுப்போம் என மிரட்டியுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
இருவரும் காந்திநகரைச் சேர்ந்த முகவரான அபய் ராவல் என்பவா் மூலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷகீல் என்ற முகவருடன் தொடர்பு ஏற்பட்டது. முதலில் ஈரான் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல வேண்டும் என்று ஷகீல் அவர்களிடம் கூறி இருவரையும் அமெரிக்காவுக்கு அனுப்ப .1.15 கோடி ரூபா பணம் பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவா்கள் அமொிக்க செல்தற்காக ஈரான் சென்றபோதே இவா்கள் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளனா். இவா்களை விடுவிப்பதற்கு 6 லட்சம் கேட்டுள்ளனர். இந்த பணம் அவர்களிடம் தாமதமாக கிடைத்ததால் மேற்கொண்டு 5 லட்சம் கேட்டுள்ளனர். . இவ்வாறு 15 லட்சம் ரூபாயை பெற்றுகொண்ட பின்னரே இருவரையும் ஈரானில் இருந்த கடத்தல் கும்பல் விடுதலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது