மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை அங்கு பணியாற்றிய ஒருவர் கையாடிச் சென்றதன் காரணமாகத் தமது நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்களில் 20 பேருக்கு அவர்களது நகைகள் உயர் நீதிமன்றப் பதிவாளர் உட்பட நீதிமன்ற அதிகாரிகள் முன்னிலையில் மீள வழங்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களில் ஒரு தொகுதியினருக்கு நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாக நகைகளை மீளளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை மக்கள் வங்கியின் யாழ். பிராந்திய முகாமையாளர் கே.கோடீஸ்வரன் தலைமையில் திருநெல்வேலிக் கிளையில் நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களில் 20 பேருக்கு முதற்கட்டமாக நகைகள் மீளளிக்கப்படுவதாகவும், மீதமுள்ளவர்களுக்கு அடுத்துவரும் வாரங்களில் படிப்படியாக நகைகள் மீளளிக்கப்படவுள்ளன என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அடகு நகை மோசடி 2012 இல் இடம்பெற்றது. மக்கள் வங்கி திருநெல்வேலி வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் தமது நகைகளை அடகு வைத்த பலர் இதனால் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும் கடந்த ஜனவரி மாதம் வரை வங்கி அதிகாரிகள் எவரும் இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்காக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக அந் நகைகளை மீளக் கையளிப்பதில் தடங்கல் ஏற்பட்டிருந்தது. எனினும் இவ்வருட ஆரம்பத்தில் வழக்கு மாவட்ட நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் வங்கியின் சமர்ப்பணத்துக்கு அமைய நிபந்தனைளுடன் நகைகளை மீளளிப்பதற்கு உயர் நீதிமன்றம் கட்டளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
—