அரகலய –அமெரிக்கா தொடர்பில் நான் குறிப்பிட்ட கருத்துக்கு எதிராக சவேந்திர சில்வா நீதிமன்றம் சென்றால் புத்தகத்தில் இல்லாத பல விடயங்களை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்படும் எனவும், முடிந்தால் அவர் வழக்கு தாக்கல் செய்யட்டும் எனவும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
குருவிட்ட பகுதியில் இடம்பெற்ற மேலவை இலங்கை சபை கூட்டத்தில் உரையாற்றுகையில், “69 இலட்ச மக்களாணையை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறோம் என குறிப்பிடும் தகைமை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது. பொதுஜன பெரமுன நாட்டு மக்களுக்கு வழங்கிய ஆணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலினப்படுத்தியுள்ளார். தாம் அரசியல் செய்வதற்கான சூழலை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்தார் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது முட்டாள்தனமானது.”
“பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே பலவீனப்படுத்தினார்.மக்களின் தன்னிச்சையான போராட்டத்தை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால நிலைமை கவலைக்குரியது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கையை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு என்ற பெயரில் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை அவர் முன்னெடுத்துள்ளார்.
நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலாபமடையும் டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை பிரித்தானியாவில் வாழும் அல்லிராஜாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சந்திப்புக்களில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். இது முற்றிலும் முறையற்றது.பொதுஜன பெரமுனவினரும் கொள்கை இல்லாமல் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குகிறார்கள்.
அரகலய (போராட்டம்) அமெரிக்காவுக்கு இடையிலான தொடர்பு குறித்து நான் வெளியிட்ட “ஒன்பதில் மறைந்த கதை” புத்தகத்தால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா எனக்கு அறிவித்துள்ளார்.
காலி முகத்திடல் களத்தை அடியொற்றி செய்த டீல் நடவடிக்கைகளை ஆதாரபூர்வமாக தன்னால் வெளிப்படுத்த முடியும்.புத்தகத்தில் இல்லாத பல விடயங்களை ஆதாரபூர்வமாக நீதிமன்றத்தில் வெளிப்படுத்த முடியும் முடிந்தால் சவேந்திர சில்வா வழக்கு தாக்கல் செய்யட்டும்” என விமல் சவால் விடுத்துள்ளார்.