உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றுக்குப் பிறகு சீன விமான நிறுவனமான Air China மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை தொடங்கியுள்ளது.
இதற்கமைய முதல் விமானம் நேற்று (03) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சுமார் 3 வருடங்களுக்கு முன்னர், Air China விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது.
நேற்று மீண்டும் இலங்கை வந்த முதல் விமான சேவைக்காக ஏ-320 ஏர்பஸ் ரக விமானம் பயன்படுத்தப்பட்டது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான CCA-425 ரக விமானம் நேற்று இரவு 08.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
அந்த விமானத்தில் 142 பயணிகளும் 09 விமான பணியாளர்களும் இருந்தனர்
“Air China” விமான சேவையானது ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சீனாவின் செங்டுவில் இருந்து இரவு 08.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளதுடன், மீண்டும் குறித்த விமானம் கட்டுநாயக்காவில் இருந்து அதே நாளில் இரவு 10.15 மணிக்கு சீனாவின் செங்டுவிற்கு புறப்பட உள்ளது. .
இந்த முதலாவது விமானத்தை வரவேற்பதற்காக இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட பெருந்தொகையான மக்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.