380
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான வடக்கு மாகாணத்திற்கான தொழிற்பயிற்சி நிலையம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயத்தை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைவதற்கான காணியை பெற்றுத்தருமாறு தான் யாழ்ப்பாண மாவட்ட செயலாளரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார். மேலும் ,தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் ஃபேர்-2023 நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதன் மூலம் ஆள் கடத்தலை தடுக்கவும், பல்வேறு கடத்தல்களில் சிக்குபவர்களை தடுக்கவும், தொழில் வாய்ப்புகளுக்கு பயிற்சி பெற்றாதவர்களுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்லவும், வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்கு தேவையான விழிப்புணர்வு வசதிகளை ஏற்படுத்தவும் நாம் செயல்பட்டு வருகிறோம் என்றும் அமைச்சர் கூறினார்.
கொழும்புக்கு வந்து எமது அமைச்சின் மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து சேவைகளையும் நாம், நீங்கள் கொழும்புக்கு வராமல் யாழ்ப்பாணத்திலேயே பெற்றுக்கொள்ளுவதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்குகின்றோம் என்றாா்.
அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சட்ட ரீதியாக செல்லுங்கள். ஏமாற்று, மோசடிகாரர்களை நம்பி பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டாம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பில் அதிகளவான மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். வெளிநாடு செல்பவர்கள் சட்டரீதியாக செல்லாது, அங்கு சென்று பல இன்னல்களுக்கு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். அது தொடர்பில் நாம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறோம்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. வெளிநாட்டுக்கு அனுப்பவுதாக சட்டவிரோத நபர்கள் பணமோசடிகள் செய்கின்றனர். இவற்றை ஊடக செய்தியாக மட்டும் வெளியிடாமல், அமைச்சுக்கும் அது தொடர்பில் முறைப்பாடுகள் அளிக்கும்போதே நடவடிக்கை எடுக்க முடியும். அதனூடாகவே ஏனையவர்களையும் பாதிப்பில் இருந்து காப்பாற்ற முடியும்.
தென்மாகாணத்தில் மோசடிகள் பற்றி சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கின்றனர். பாதிக்கப்பட்ட சம்பவங்கள், ஏமாற்றியவர்கள் தொடர்பில் பதிவுகளை வெளியீடுகின்றனர். ஆனால் வடமாகாணத்தில் அவ்வாறு செய்வது மிக குறைவு என்றார்.
அதேவேளை, தமிழில் உங்களோடு உரையாட முடியாதமைக்கு மனம் வருந்துகிறேன். அதற்கு நான் காரணமல்ல முன்னர் இருந்த அரசியல்வாதிகள் எங்களை பிரித்து விட்டார்கள்.வடக்கு கிழக்கில் ஏற்பட்ட பிரச்சனைகள் நாம் சகோதரத்துவம் இல்லாமல் போனதற்கு அரசியல்வாதிகளே காரணம். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படலை. இந்த பிரச்சனைக்கு காரணத்தை கண்டறியாமல், சர்வதேசத்திற்கும், மனிதவுரிமை ஆணைக்குழுவிற்கும் என ஏதோ சாட்டுக்களை கூறிக்கொள்கின்றனர்.
தற்போது ஜனாதிபதி இவற்றை தீர்க்கும் முகமாக வடபகுதி மக்களின் காணிகளை அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். மதவாதம், இனவாதம் என பிரிந்து வாழாமல் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.ஊழியர் சேமலாப நிதி , ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பான பிரச்சினைகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பான விடயங்கள், வெளிநாட்டலுவல்கள் அமைச்சகத்தின் தூதரகத் துறையின் சேவைகள் முதலானவற்றை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்வதற்கு தேவையான வசதிகள் குளோபல் ஃபேர்-2023 யில் செய்யப்பட்டுள்ளன – என்றார்.
Spread the love