சங்கிலி அறுக்க முற்பட்ட கொள்ளையர்களை பெண்ணொருவர் தனித்து நின்று தாக்கி ஒருவரை ஊரவர்களின் உதவியுடன் மடக்கி பிடித்துள்ளார்.
யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பண்ணாகம் வீதியில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை (16.07.23) 40 வயதுடைய பெண்ணொருவர் நடந்து சென்றுள்ளார்.
ஆள்நடமாற்றம் குறைந்த வீதியில் குறித்த பெண் நடந்து செல்வதனை அவதானித்த இருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து அப்பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓட முயற்சித்துள்ளனர்.
அதன் போது அப்பெண் , தனது சங்கிலியை அறுக்க முற்பட்ட , மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த இளைஞனை பிடித்து இழுத்துள்ளார்.
அதனை சற்று எதிர்பாராததால் , மோட்டார் சைக்கிள் ஓட்டி நிலைதடுமாறியதால் , மோட்டார் சைக்கிளுடன் இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
அதனை அடுத்து மோட்டார் சைக்கிள் ஓட்டி மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் விட்டு விட்டு , தப்பியோடியுள்ளார். மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் இருந்தவரின் மேலங்கியை பெண் பிடித்து வைத்திருந்ததால், அவரும் மேலங்கியை கழட்டி விட்டு, பெண்ணின் பிடியில் இருந்து தப்பி, அருகில் இருந்த பற்றைக்காட்டுக்குள் ஒழிந்துள்ளார்.
அதேவேளை ஊரவர்களும் அவ்விடத்தில் கூடி, தப்பியோடியவர்களை தேடியுள்ளனர். அதன் போது , சங்கிலி அறுத்தவர் , மேலங்கி இன்றி பற்றைக்காட்டுக்குள் மறைந்திருந்த நிலையில் பிடிக்கப்பட்டார்.
பிடிக்கப்பட்ட நபரும் , சம்பவ இடத்தில் கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் ஊரவர்கள் வட்டுக்கோட்டை காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.