இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் 13வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க கோரி வட கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் கடிதம் ஒன்றினை கையளித்துள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான மகஜர் ஒன்றினை யாழ் இந்திய துணைதூதுவரகத்தில் இன்றைய தினம் கையளித்தனர்
மகஜர் கையளித்த பின் ஊடகங்களுக்கு வாழ்நாள் பேராசிரியர் பொ, பாலசுந்தரம் பிள்ளை கருத்து தெரிவிக்கையில்,
13வது திருத்த சட்டம் குறித்து அதனால், வந்த மாகாண சபை கட்டமைப்பினை முழுமையாக அமுல் நடத்துமாறு சிவில் சமூக பிரதிகளாக யாழ் இந்தியன் துணை தூதுவரை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளோம்.
அவர்கள் அதை டெல்லிக்கு அனுப்பி ஒரு சாதகமான பதிலை தருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். முடிந்த வரையில் 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி இந்த கடிதத்தினை அனுப்பி இருக்கின்றோம்.
36 வருடங்கள் இந்த அரசியல்வாதிகள் 13ஐ நடைமுறைப்படுத்துவதற்குரிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை. குறிப்பாக இணைந்த வடகிழக்கில் அமைந்த மாகாணசபையில் ஒன்றரை வருடங்கள் மாத்திரமே மக்கள் பிரதிநிதிகள் பங்கு பற்றினர்.
பிரிந்த வடக்கு மாகாணமும், ஐந்து வருடம் மாத்திரம் செயற்பாட்டில் இருந்தது. அந்த காலத்திலும் அது சரியான முறையில் செயற்படுத்தப்படவில்லை. அதிகாரங்களில் சில தடைகள் இருந்தாலும் சரியான முறையில் அமுல்படுத்தப்படவில்லை என்ற கவலை நமக்கு உள்ளது என்றார்.