இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் K.S.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு, ஒரே மாநில நிர்வாக சுயாட்சியுடன் கூடிய அரசு உருவாக வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவற்துறை அதிகாரமின்றி 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்தவும் இலங்கை திட்டமிட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான உதவிகள் நிபந்தனையற்றவையாக இருக்கக்கூடாது எனவும் ஈழத்தமிழர், மீனவர் நலன் சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வு காண இலங்கை ஜனாதிபதியிடம் பாரத பிரதமர் வலியுறுத்த வேண்டும் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளை இந்தியாவிற்கு எதிராக உளவு பார்க்கும் பணிகளுக்கு சீனா பயன்படுத்திக்கொள்வதை இலங்கை அனுமதிக்கக்கூடாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.