330
தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராம அவர்களுடன் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,
“திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் காணப்படும் பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது தொடர்பாகவும் ஏற்கனவே ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இருக்கின்றேன்.
அதன் தொடர்ச்சியாக விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட கட்டளைத் தளபதி , பிரதேச செயலாளர் மற்றும் நில அளவையாளர் ஆகியோருடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என தெரிவித்தார்.
அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு பரிகாரம் காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love