394
இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகி உள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மாண்பு மிகு மலையகம்-200 நடைபவனி இன்றைய தினம் திங்கட்கிழமை(31) முருங்கனை சென்றடைந்தது.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் பேசாலையில் ஆரம்பமான நடைபவனி ஓலைத்தொடுவாய்,எருக்கலம்பிட்டி ஊடாக காலை 11 மணியளவில் மன்னாரை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மலையக மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் நிகழ்வு மன்னார் வாழ் மக்களின் பங்குபற்றுதலுடன் மதியம் 3 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நிலையில் மூன்றாம் நாள் நிகழ்வு நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்து இன்று காலை 5 மணியளவில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தில் இருந்து ஆரம்பமான நடைபவனி தள்ளாடி,உயிலங்குளம் ஊடாக முருங்கனை சென்றடைந்தது. இன்றைய நடைபவனியிலும் மலையக மக்கள் பிரதிநிதிகள்,மத குருக்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மன்னார் மாவட்ட இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நடைபவனியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கு ஆதரவை வழங்கும் விதமாக மன்னார் வாழ் மக்களால் பல்வேறு இடங்களில் தாக சாந்தி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Spread the love