423
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூரு விளைவிக்கும் முகமாக நடந்து கொண்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த நான்கு ஆண்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியை சேர்ந்த 4 ஆண்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் அடையாள அட்டை உள்ளிட்ட தம்மை அடையாளப்படுத்தி கொள்ளும் ஆவணங்கள் எவையும் இல்லை எனவும் , அவர்களை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெளிமாவட்டங்களை சேர்ந்த சிலர் யாழ்.நகர் பகுதிகளில் கூடி , ஊதுபத்தி விற்பனை , சாத்திரம் சொல்லுதல் , யாசகம் பெறல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நகர் பகுதிக்கு வரும் புலம்பெயர் நாட்டவர்களை இலக்கு வைத்தும் உள்ளூர் வாசிகளையும் தொந்தரவு செய்யும் முகமாக செயற்பட்டனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , நகர் பகுதியில் காவல்துறையினர் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு , அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட பலரை நகர் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி இருந்தனர். அவர்களில் தம்மை அடையாளப்படுத்தும் ஆவணங்கள் இல்லாத நான்கு ஆண்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.
இதேவேளை யாழ். மாவட்டத்தில் உள்ள பிரபல ஆலயங்களான மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. செல்வ சந்நிதி முருகன் ஆலய மகோற்சவ திருவிழா 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் பிரசித்தி பெற்ற ஆலய திருவிழாக்களை இலக்கு வைத்து , யாசகம் பெறுவோர் , ஊதுபத்தி விற்போர் , சாத்திரம், குறி சொல்வோர் என பலரும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் நிலையில் அவர்களுடன் ஆலயங்களில் பக்தர்களின் சங்கிலி உள்ளிட்ட உடமைகளை திருடும் கும்பல்களும் வருகை தந்துள்ளதாகவும் , அவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்கும் மாறும் காவல்துறையினர் கோரியுள்ளனர். அத்துடன் இவ்வாறானவர்களை கண்காணிக்கும் விசேட செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Spread the love