யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் கனலி மாணவர் சஞ்சிகை நான்காவது இதழ் வெளியிடும் நிகழ்வானது ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் செ.கண்ணதாசனும் , சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமும் கலந்து கொண்டனர். சஞ்சிகையை கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம் வெளியிட முதல் பிரதியை யாழ்ப்பாண பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் செ.கண்ணதாசன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் வாழ்த்துரையை பிஷப் சவுந்தரம் மீடியா சென்டர் இயக்குநர் ரூபன் மரியாம்பிள்ளை அடிகளும், ஆய்வுரையை யாழ்ப்பாணக் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ஜோ.ஜோன்சன் ராஜ்குமாரும் மதிப்பீட்டு உரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் தி.செல்வமனோகரனும் மேற்கொண்டனர்.
ஊடகக் கற்கைகள் துறையின் மூன்றாம் வருட மாணவர்களால் உருவாக்கப்பட்ட கனலி சஞ்சிகையானது முழுக்க முழுக்க மாணவர்களின் ஆக்கங்களை தாங்கியே வெளிவருவதுடன் இம்முறை நாட்டார் ஊடக சிறப்பிதழாக வெளியானது.
இந்நிகழ்வில் ஊடகக்கற்கைகள் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் தினேஸ் கொடுதோர், ஊடகக்கற்கைகள் துறை விரிவுரையாளர் அனுதர்ஷி கபிலன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.