532
வடமாகாணத்தில் நாளைய தினம் திங்கட்கிழமை தொடக்கம் ஒரு வார கால பகுதிக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
எமது பகுதிகளில் டெங்கின் தாக்கம் குறைவாக காணப்பட்டாலும் எதிர்வரும் மாதங்களில் மழை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே டெங்கின் தாக்கம் அதிகரிக்க கூடும்.டெங்கு ஒழிப்பு தொடர்பில் வடமகாணத்தில் கலந்துரையாடல்கள் ஆளுநர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
அந்த கலந்துரையாடலுக்கு பின்னர் பிரதம செயலாளர் மற்றும் சுகாதார செயலாளரோடு மாகாண மட்ட கலந்துரையாடல் நடைபெற்று 14 ஆம் திகதி தொடக்கம் ஒரு வாரத்துக்கு வட மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். குறிப்பாக இந்த வருடம் இலங்கை பூராகவும், கடந்த ஐந்தரை மாதங்களில் 45,612 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டிருக்கிறது,
இதில் யாழ் மாவட்டத்தில் 1472 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 62 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 76 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 103 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 100 பேருக்கும் டெங்கு இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது .
ஆகவே யாழ் மாவட்டத்தில் அதிகளவிலானோர் டெங்கு நோய்க்கு உள்ளாகி இருக்கின்றார்கள், குறிப்பாக யாழ் மாவட்டத்தில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, நல்லூர் மற்றும் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அதிகளவானோர் டெங்கு நோய்க்கு உள்ளாகி இருக்கின்றனர் என தெரிவித்தார்.
Spread the love