521
யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த முகமூடி கொள்ளை கும்பலை சேர்ந்த நால்வரை இன்றைய தினம் திங்கட்கிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்களிடம் இருந்து இரு இடங்களில் கொள்ளையிடப்பட்ட 28 பவுண் நகைகள் , கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று , வாள் ஒன்று மற்றும் நான்கு கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு கல்வியங்காடு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றினுள் புகுந்த மூவர் அடங்கிய கொள்ளை கும்பல் அருட்தந்தையரை கத்தி முனையில் மிரட்டி , அவரின் 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் தேவாலய உண்டியலில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது.
மறுநாள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையை பிரித்து உள்நுழைந்த மூவர் அடங்கிய முகமூடி கொள்ளை கும்பல் வீட்டில் இருந்தவர்களை கட்டி வைத்து , கத்தி முனையில் கொள்ளையிட முயன்ற போது , வீட்டார் கூக்குரல் எழுப்பவே , அயலவர்கள் விழித்துக்கொண்டு , தமது வீட்டு மின் விளக்குகளை ஒளிர விட்டதை அடுத்து கொள்ளை கும்பல் தமது கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பி சென்றது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு சங்கிலியன் வீதியில் உள்ள வீடொன்றினுள் கூரையை பிரித்து உள்நுழைந்த மூவர் அடங்கிய முகமூடி கொள்ளை கும்பல் 24 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது.
அத்துடன் இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் வீட்டில் இருந்த வயோதிப தம்பதியினரை கத்தி முனையில் மிரட்டி 04 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்று இருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் நான்கு இரவுகள் தொடர்ச்சியாக இடம்பெற்ற கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நான்கு முகமூடி கொள்ளை சம்பவங்களுக்கு முன்னரே , நல்லூர் பகுதிகளில் தனிமையில் செல்லும் முதியவர்களை இலக்கு வைத்து அவர்களை மிரட்டி , கையடக்க தொலைபேசி , அவர்களிடம் இருக்கும் சிறிய தொகை பணம் என்பவற்றை வழிப்பறி செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் காவல்துறையினர் தொடர் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
Spread the love