Home இலக்கியம் எல்லோரும் வாழ்வோம் எங்களின் விருப்பிற்குரிய இடங்களில்! சி.ஜெயசங்கர்.

எல்லோரும் வாழ்வோம் எங்களின் விருப்பிற்குரிய இடங்களில்! சி.ஜெயசங்கர்.

by admin

 

 

அந்தப் பழைய வாழ்க்கை

ஈரலிப்புடன் இன்னும் நினைவுகளில்

மீண்டும் அதை வாழ்ந்துவிடும் அங்கலாய்ப்பு

நினைவுகளில் கிளர்ந்து கிளர்ந்து

வலியும் மகிழ்வுமாக

உடல் குளிர்ந்து

வெளியறியா துக்கத்தில் விறைத்தபடி

 

முகம் சிரித்து

புத்தியால் உடல் நகர்த்தி

பெயர்ந்து பெயர்ந்து

புதுப்புது வாழ்க்கை

கைகளை விட்டுப்போன

ஆட்டுக்குட்டிகளை துரத்திப் பிடிப்பதான

வாழ்க்கை

 

துன்பகரமான அலைக்கழிவுகளில்

புதையுண்டுபோகும் துயரம்

 

புதிய மனிதர்

புதிய சூழல்

புதிய புதிய நிலவுருக்கள்

அதில் வாழும் உயிரினங்கள்

வாகனங்கள் சனசந்தபடி இரைச்சல்

நெஞ்சில் ஒட்டாத இசையாய்

வழுக்கிச் சென்றபடி

உடலில் பட்டாலும்

உள்ளத்தில் ஒட்டாத காற்று

 

நெஞ்சம் கனத்து

தொண்டைக் குழியுள் புற்றெடுத்திருக்கும்

கக்கிவிடவும் விழுங்கிவிடவும் முடியாத் துயரம்

 

நம்பிக்கையை வலிந்து கண்டுபிடித்து

மகிழ்ச்சி காணும் வாழ்க்கை

வாகனப் பயணத்தில்

கண்ணில் பட்டுக் கடந்து மறைந்து போகும்

காட்சிகளான

பெயர்வு வாழ்க்கை

 

யதார்த்த நிலவுருவின் சலனம் கிழித்து

மிளிரும் நினைவின் நிலவுருக்கள்

முகங்கள் குரல்கள்

பாதைகள் படலைகள்

முற்றங்கள் மரங்கள் மணங்கள்

மறக்க முடியாத கோபதாபங்கள்

கொண்டாட்டங்கள்

மறக்க முடியாதபடிக்கு

நெஞ்சம் கனக்க

கொட்டிக் கழுவி முடியாதபடிக்கு

தலைக்குள் ஒரு வாழ்க்கை

மிதித்து நடக்கும் பாதங்களில்

ஒட்டாத பெயர்வு வாழ்க்கை

 

உடலை உள்ளத்தை ஈடாட வைக்கும்

துயரம்

ஒரு வாழ்க்கை

சந்ததிகளும் உணரமுடியாப்

பெருந்துயரம்

மனதுக்குள் பொத்திக் கொண்டு…

 

வரலாற்றின்

வலைவீச்சில் சிக்கிக்கொள்ளும்

சில சந்ததிகளின் துயரம்

எமக்கும் உரியதாயிற்று

 

உலகப் புலம்பெயர்வுகளே

வரலாற்றின் புலப்பெயர்வுகளே

உரத்துக் குரல் கொடுப்போம்

வேண்டாம்

இனியொரு சந்ததிக்கு

இந்த வாழ்க்கை

 

எங்களின் விருப்பிற்குரிய இடங்களில்

எல்லோரும் வாழ்வோம்

எல்லோரும் எல்லாமும் வாழும்

இந்த அழகிய பூவுலகில்

 

சி.ஜெயசங்கர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More