431
இந்தியாவின் “கோடிலியா” சுற்றுலா கப்பல் மூலம் யாழ்ப்பாணம் வருகை தரவிருந்த சுற்றுலாவிகளை வரவேற்பதற்கு , வடமாகாண சுற்றுலா பணியகம் பெரும் செலவில் வரவேற்பு நிகழ்வுகளை ஒழுங்கமைத்து இருந்த போது , சுற்றுலா பயணிகள் தரை இறங்காததால் ஏமாற்றம் அடைந்திருந்தனர். “கோடிலியா” சுற்றுலா கப்பல் இந்தியாவில் இருந்து இலங்கையின் தென் பகுதி, கிழக்கு பகுதி என்பவற்றுக்கு சென்று இறுதியாக வடக்கில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வந்து , மீண்டும் இந்தியா செல்லும்.
அவ்வாறு காங்கேசன்துறை துறை முகத்திற்கு சுற்றுலா கப்பலில் வரும் சுற்றுலாவிகளை வரவேற்க உரிய ஒழுங்குகள் இல்லை என குறை கூறப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் அது தொடர்பில் நடவடிக்கைக்கு எடுத்து , நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வரவிருந்த கப்பலில் வரும் சுற்றுலாவிகளை வரவேற்க காங்கேசன் துறை துறைமுகத்திற்கு அருகில் , வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான கட்டடத்தில் வரவேற்பு நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் ஏற்பாட்டில், நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. நிகழ்வில், யாழ் இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ், தூதுவரக அதிகாரி ராம் மகேஷ், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியக தலைவர் பத்திநாதன் உள்ளிட்ட பிரமுகர்களும், நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர்.
சுற்றுலாவிகளை வரவேற்க ஒயிலாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அத்துடன் , உள்ளூர் உற்பத்திகளுக்கான காட்சிக்கூடங்கள் , சுற்றுலாப் பயணிகளுக்கான முச்சக்கரவண்டி, தனியார் வாகன சேவையை வழங்கி வரும் போக்குவரத்துச் சங்கங்கள் மற்றும் தனியார் வாகன உரிமையாளர்கள் என பலரும் சுற்றுலாவிகளின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அவ்வேளை , கால நிலை சீரின்மை காரணமாக காற்று பலமாக வீசுவதால் கப்பலை கரைக்கு கொண்டு வர முடியாது என மாலுமி அறிவித்து, கப்பலை கரைக்கு கொண்டு வருவதற்கோ , வேறு வழியில் சுற்றுலா பயணிகளை தரை இறக்கவோ முடியாது என கூறியதால் சுற்றுலா பயணிகள் காங்கேசன்துறை கரைக்கு வர முடியவில்லை. அதனால் சுற்றுலாவிகளை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தவர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டது. பின்னர் , சுற்றுலாவிகளை வரவேற்க வந்த பிரமுகர்களை வரவேற்று நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதேவேளை இனி அடுத்த கப்பல் வருகை அடுத்தவருடம் ஜனவரி மாதத்திற்கு பின்னரே இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறி ப்பிடத்தக்கது.
கோடிலியா சுற்றுலா கப்பல் மூலம் ஜுன் 16 முதல் 9 தடவைகளாக காங்கேசன்துறை ஊடாக யாழ்ப்பாணம் வருகை தந்த போது, 6000க்கும் மேற்பட்ட சுற்றுலாவிகள், வருகை தந்தனர். இனி அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இந்தச் சேவை தொடர்ந்து நடைபெறும். அதேவேளை மேலதிகமாக, காங்கேசன்துறை – நாகபட்டினம் நாளாந்த கப்பல் சேவையும் ஆரம்பிக்கும் எனவும், இதன் மூலம் வடக்கு மாகாண மக்கள் இன்னும் பல நன்மைகளை அடைவர் என இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ், நிகழ்வில் உரையாற்றி இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love