வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த நாகர்கோவில் பகுதியில் காவற்துறை காவலரனை அமைக்குமாறு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தும் இதுவரையில் காவலரண் அமைக்கப்படவில்லை என மருதங்கேணி பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (27.09.23) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
அதன் போதே பிரதேச செயலரால் அவ்வாறு தெரிவிக்கப்பட்டது. மேலும் தெரிவிக்கையில்,
மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் உள்ள குடத்தனை , நாகர் கோவில் மற்றும் மணற்காடு பகுதிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அதனால் அப்பகுதிகளில் கடல் நீர் உட்புக கூடிய அபாய நிலைமை காணப்படுவதுடன் , குடிநீர் உவர் நீராக மாறும் அபாயமும் காணப்படுகிறது. அதனால் அப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துமாறு தொடர்ச்சியாக பொது மக்கள் எம்மிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்நிலையில் நாமும் பொலிஸார் உள்ளிட்ட தரப்புகளிடம் கோரிக்கை விடுத்த போது , குடத்தனை மற்றும் நாகர் கோவில் பகுதிகளில் பொலிஸ் காவலரண்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்ட போதிலும் , நீண்ட காலமாகியும் காவலரண்கள் எவையும் அமைக்கப்படவில்லை என்பதுடன் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரதேச செயலர் தெரிவித்தார்.