முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி T.சரவணராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலத்தில் அதிகளவில் பேசப்பட்ட சில வழக்குகள் நீதவான் T.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. குருந்தூர் மலை விவகாரத்துடன் தொடர்புடைய வழக்கு, கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான ஆரம்ப கட்ட விசாரணைகள் நீதவான் T.சரவணராஜா முன்னிலையில் இடம்பெற்றன.
உயிர் அச்சுறுத்தல் காரணமாகவும் அதிக அழுத்தம் காரணமாகவும் தான் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்வதாக, கடந்த 23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதத்தில் முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி T. சரவணராஜா குறிப்பிட்டுள்ளார்.
உயிர் அச்சுறுத்தல் மற்றும் அதிக மன அழுத்தம் காரணமாக நீதிபதி தனது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக BBC சிங்கள சேவையும் இன்று செய்தி வௌியிட்டிருந்தது. இது தொடர்பில் அவர்கள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சவிடம் வினவியுள்ளனர்.
நீதிபதி சரவணராஜா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் 5 வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.
இந்த வழக்குகளின் பிரதிவாதி என்பதனாலேயே இதற்கு ஆலோசனை பெற்றுக்கொள்வதற்காக நீதிபதி தனது விருப்பத்தின் பெயரில் சட்டமா அதிபரை சந்திப்பதற்கு சென்றுள்ளதாகவும் நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
அவருக்கு உயிர் அச்சுற்றுத்தல் இருந்திருந்தால், நீதிபதி என்ற வகையில் அதற்காக பிடியாணை பிறப்பிப்பதற்கான இயலுமை அதிகாரம் அவருக்கு இருந்ததாகவும் நீதி அமைச்சர் BBC சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.
நீதிபதி T.சரவணராஜா ஒரு வாரத்திற்கு முன்னர் கொழும்பிற்கு சென்று தனது காரை விற்றுள்ளதாகவும் அவர் மேலைத்தேய நாடுகளின் இரண்டு தூதுவர்களை சந்தித்து, தான் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 4 ஆம் திகதி நீதவான் T.சரவணராஜா குருந்தூர் மலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றில் ஈடுபட்டார். அதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் அங்கு சென்றிருந்ததுடன், அவர் நீதவானுடன் பேசுவதற்கு முயன்ற போது விவாதம் ஏற்பட்டது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஜூலை 7 ஆம் திகதி சபையில் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்நிலையில், ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதவான் T.சரவணராஜா ஒரு மனநோயாளி என குறிப்பிட்டார்.
இதனையடுத்து, சரத் வீரசேகரவின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு சட்டத்தரணிகள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.