இன்று (06.10.23) அதிகாலை 5 மணி அளவில் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் கென்டேனர் மோதி விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நிட்டம்புவ, கஜூகம பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில், 22 பேர் காயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறையில் இருந்து பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 22 பேர் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல, கரந்திப்பல பிரதேசத்தில் விபத்து!
இன்று (06.10.23) காலை பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துடன் மோதியதில் பாடசாலை பேருந்தில் பயணித்த சுமார் 15 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல, கரந்திப்பல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொள்ளுப்பிட்டியில் விபத்து – 17 பேர் காயம்!
கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பேருந்து மீது கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 போ் உயிாிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து காரணமாக பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் காவற்துறையினரும் விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (06) காலை 6 மணியளவில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கார் மோதியதில் முன்பள்ளி ஆசிரியை உயிாிழப்பு
பாதசாரி கடவையில் தனது மகளுடன் பயணித்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்துள்ளாா். . விபத்தினை ஏற்படுத்திய கார் தப்பிச்சென்றுள்ளது. காயமடைந்த 12 வயதுடைய சிறுமி களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகஹவத்த மாவத்தை, பொல்கஸ்ஸோவிட்ட ஹல்பிட்ட பகுதியைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியையான புஷ்பிகா செவ்வந்தி நாகந்தல (வயது 38) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த முன்பள்ளி ஆசிரியை பிலியந்தலையில் இருந்து பேருந்தில் வந்து ஹல்பிட்ட பகுதியில் இறங்கி பாதசாரி கடவையை கடக்கும்போது கஹதுடுவவிலிருந்து கெஸ்பேவ நோக்கி சென்ற கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.