இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் மூண்டுள்ளது. இதனால், இஸ்ரேலில் இருக்கும் வெளிநாட்டினர் விமான நிலையங்களில் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலஸ்தீனத்திலிருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் மூண்டுள்ளது.
பாலஸ்தீனத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் 100க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று இஸ்ரேலின் பல பகுதிகளுக்குள் நுழைந்த பலஸ்தீன ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இவ்வாறு தாக்கியுள்ளது.
பாலஸ்தீன ஹமாஸ் தாக்குதல்களால் சுமார் 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஹமாஸ் உறுப்பினர்களால் 53 பேர் கொண்ட இஸ்ரேலியர்கள் குழுவொன்று கடத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்களும் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, போர் ஆரம்பித்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
“இஸ்ரேல் குடிமக்களே, நாம் போரில் இருக்கிறோம். இது கூட்டு முயற்சியோ அல்லது எதிர்ப்பு நடவடிக்கையோ இல்லை. இது போர். ஹமாஸ் இதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும். எதிரிகள் இதுவரை சந்திக்காத பதிலடியை சந்திக்க உள்ளனர்,” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்
இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில்161 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே, பாலஸ்தீனர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் உரிமையை பெற்றுள்ளனர் என்று பாலஸ்தீன அதிபர் Mahmoud Abbas அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு இடையே தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்த பகுதி ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. இவ்வமைப்புதான் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்ட கால குற்றச்சாட்டு. ஹமாஸூக்கு தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து காஸாவைக் கைப்பற்ற முயற்சிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு. இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொள்வதும் தாக்குதல் நடத்திக் கொள்வதும் தொடர்கதையாக இருக்கிறது.
20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் – BBC.
இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவிய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது.
ஜெருசலேம் உள்பட நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். போருக்கான தயார் நிலையை இஸ்ரெல் பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவைச் சேர்ந்த டஜன் கணக்கான ஆயுதக்குழுவினர் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து தற்போது தலைமறைவாக உள்ளனர்.
காஸா பகுதியில் உள்ள இலக்குகளை ஹமாஸ் ஆயுதக் குழு தாக்கி வருவதாகவும் அப்பகுதியில் நிலவும் சூழ்நிலையை மதிப்பிட்டு வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டன. இதனால் நாடு முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கையை அறிவிக்கும் விதமாக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன.
இந்தத் தாக்குதலின்போது ஒருவர் கொல்லப்பட்டதுடன், டெல் அவிவ் மற்றும் காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அதன் ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தும் பிரிவு 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவியதாக அறிவித்துள்ளது.
“காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலின் போது இஸ்ரேலிய ராக்கெட்டுகள் இலக்கு வைக்கப்பட்டன” என்றும் ஆயுதக் குழுவினர் “வெவ்வேறு இடங்களில்” இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்ததாகவும் இஸ்ரேலின் பாதுகாப்புப் படை (IDF) கூறியுள்ளது.
இஸ்ரேலிய பொது ஊழியர்களின் தலைவர் “சூழ்நிலை மதிப்பீட்டை” நடத்தி வருவதாகவும், “இந்த நிகழ்வுகளுக்கான விளைவுகளையும் பொறுப்பையும் ஹமாஸ் எதிர்கொள்ளும்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள அதே நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் “தற்காலிக முகாம்களுக்கு அருகிலேயே இருக்க” அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
ஒருவர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலின் மேகன் டேவிட் ஆடோம் மீட்பு நிறுவனம் கூறியுள்ளது.
அஷ்கெலோன் நகரில் தீயை அணைக்கும் பணியில் இஸ்ரேலிய தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள காட்சிகள் காட்டுகின்றன. அதில் வாகனங்கள் எரிந்து கரும்புகை வெளியேறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக பாதுகாப்புத் துறையின் முக்கிய அதிகாரிகளின் சந்திப்பு நடைபெற உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் “அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள்” ஊடுருவியுள்ளதாகவும், சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் இஸ்ரேலின் தற்காப்புப் படைக் குழுவின் ஆரம்ப அறிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் பாதுகாப்புப் படை “நாடு முழுவதும் உள்ள இஸ்ரேலியர்கள் – ஷபாத் மற்றும் சிம்சாட் தோராவின் விடுமுறை நாளில் சைரன்கள் ஒலிப்பதையும், ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் வீசும் சத்தத்தையும் கேட்டுக் கண் விழித்தனர். நம்மை நாமே காத்துக் கொள்வோம்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.