498
வீதி அகலிப்பு பணிக்காக வீதியோரமாக நின்ற பனை மரத்தை தறித்த போது , மரம் மின்சார கம்பி மீது விழுந்து, மின்சார கம்பி அறுந்ததில், வீதியில் நின்ற பெண் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டை சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் வீதி அகலிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் வீதியோரமாக நின்ற பனை மரம் ,வீதி அகலிப்புக்கு இடையூறாக இருந்தமையால் அதனை தறித்துள்ளனர். மரம் தறிக்கும் போது , வீதியில் பயணித்தவர்களை மறித்து வைத்திருந்தனர். அவ்வேளையில் மரம் முறிந்து மின்சார கம்பி மீது விழுந்து மின்சார கம்பிகள் அறுந்தன. அத்துடன் ஐந்து மின் கம்பங்களும் முறிந்தன.
அவ்வாறு அறுந்த மின்சார கம்பி ஒன்று வீதியில் பயணத்தை தொடர காத்திருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிளில் தொடுகையுற்றதில் அப்பெண் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். படுகாயமடைந்த பெண்ணை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை மின்சார கம்பிகள் அறுந்து , மின்சார தூண்களும் முறிந்தமையால் , அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டது. விரைந்து செயற்பட்ட மின்சார சபை ஊழியர்களால் பல மணி நேர பணியின் பின்னர் மின்சார இணைப்புகள் சீர் செய்யப்பட்டு ,அப்பகுதிக்கான மின்சாரம் வழங்கப்பட்டது.
Spread the love