ஹமாஸின் விமானப்படைத் தலைவர் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
நேற்றிரவு (14.10.23) ஹமாஸ் படையின் தலைமை அலுவலகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை, அந்த தாக்குதலில் ஹமாஸ் குழுவின் விமானப் படைத் தலைவர் முராத் அபு முராத் ( Murad Abu Murad) கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முராத் முக்கிய காரணம் என இஸ்ரேல் கூறியுள்ளது.
லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர்களை கொன்றதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன மேற்கு கரையில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் இராணுவம் சோதனை நடத்தி வருகிறது.
ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடையதாக மேற்கு கரையில் 230 பேரை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் மேற்காசிய நாடுகளில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்று இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
ஜோா்தானின் அம்மான், யேமனின் சனா, ஈரானின் டெஹரான் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துவிட்டு சாலைகளில் முஸ்லிம்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தியுள்ளனா்.
லெபனானின் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
பாலஸ்தீனத்தின் காஸா முனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7 ஆம் திகதி அதிகாலை இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி, பலரை பணயக்கைதிகளாக பிடித்துச்சென்றனர்.
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஹமாஸ் அமைப்பு மீது போர் பிரகடனத்தை அறிவித்து இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் காஸாவுக்கு மின்சாரம், தண்ணீர், எரிபொருள், உணவுப்பொருட்கள் விநியோகத்தையும் இஸ்ரேல் நிறுத்தியது. இஸ்ரேலின் தொடர் தாக்குதல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இன்றி காஸா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரு தரப்பிலும் இதுவரை சுமார் 4,800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் ஆவர்.
இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் பணயக்கைதிகளை கொல்வோம் என்று ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தரைவழி தாக்குதலை உடனே தொடங்காமல் பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இராணுவம் இறங்கியது.
அதன்படி, ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச்சென்ற 250 இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்டனர். இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது 18 பணயக்கைதிகள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பணயக்கைதிகள் மீட்கப்பட்டதையடுத்து, காஸாவிற்குள் தரைவழி தாக்குதல் நடத்துவதற்கான செயல்பாட்டு திட்டத்தை இஸ்ரேல் இராணுவம் வகுத்தது. இதில் வடக்கு காசாவில் உள்ள 11 இலட்சம் பொதுமக்களை உடனே அங்கிருந்து வெளியேறி தெற்கு காஸாவுக்கு செல்லுமாறு இஸ்ரேல் எச்சரித்தது.
வெளியேறுவதற்கான காலக்கெடுவாக 24 மணி நேரம் அளித்து நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் காஸாவுக்குள் இஸ்ரேல் இராணுவம் மிகப்பெரிய தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருவது உறுதியானது.
தரைவழி தாக்குதலுக்கு முன்பு வான்வழி தாக்குதலை அதிதீவிரமாக நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளதால், வடக்கு காஸாவில் உள்ள மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
இன்றுடன் இஸ்ரேல் விதித்த கெடு முடிவடைவதால், மக்கள் வேகமாக வெளியேறி வருகிறார்கள்.