Home இலங்கை நோகாமல் போராடும் கட்சிகளின் கடையடைப்பு?

நோகாமல் போராடும் கட்சிகளின் கடையடைப்பு?

"நோகாமல் தின்னும் நுங்கு"

by admin

 

காந்தி சொல்வார்…. அகிம்சை என்பது சாகத் துணிந்தவரின் ஆயுதம், அது சாகப் பயந்தவரின் ஆயுதம் அல்லவென்று. அகிம்சையில் மட்டுமல்ல வன்முறை போராட்டத்திலும் அதுதான் அடிப்படை விதி. அர்ப்பணிப்புக்குத் தயாராக இருப்பவர்கள்தான் தலைமை தாங்கலாம். தியாகத்துக்கு தயாராக இருக்கும் தலைமையின் கீழ் மக்கள் துணிந்து அணி திரள்வார்கள். முன்னுதாரணம் மிக்க தலைவர்களின் பின்தான் மக்கள் அணி திரண்டிருக்கிறார்கள்.

ஆனால் தமிழரசியல் அரங்கில் முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களைத் தொகுத்துப் பார்த்தால்,ரிஸ்க் எடுப்பதற்கு தயாரில்லாத தலைவர்கள் பொதுமக்களை ரிஸ்க் எடுக்குமாறு தூண்டுகிறார்களா? என்று கேட்கத் தோண்றுகிறது.

ஏழு கட்சிகள் இணைந்து கடந்த வாரம் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தின. அது பெரிய வெற்றியைப் பெறவில்லை. இப்பொழுது ஒரு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.முல்லைத்தீவு நீதிபதி;நிலப் பறிப்பு;சிங்களபௌத்த மயமாக்கல்;மேய்ச்சல் தரை போன்ற எல்லா விவகாரங்களுக்குமாக வடக்குக் கிழக்கு முழுவத்துக்குமாக கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் கொங்கிரசும் அதற்கு ஆதரவு தருவதாக வாக்குறுதி அளித்ததாக ஒரு தகவல். முதலில் இந்த வாரம் கடையடைப்பு என்று கூறப்பட்டது.ஆனால் ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சை காரணமாக திகதியை ஒத்திவைக்குமாறு கேட்கப்பட்டது.அதனால் வரும் இருபதாம் திகதி, வெள்ளிக்கிழமை பூரண கடையடைப்பு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.ஏன் வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்கு பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவது காரணம்,குறுகிய காலத்துக்குள் ஒழுங்கு செய்யக்கூடிய ஒரு போராட்டம் அதுதான் என்பது.இரண்டாவது காரணம்,பெரிய போராட்டங்களுக்குத் தேவையான நிதியை உடனடியாகத் திரட்டுவதில் உள்ள சவால்கள். மூன்றாவது காரணம், வடக்குக் கிழக்கு தழுவிய ஒரு போராட்டம் குறிப்பாக முஸ்லிம்களையும் உள்ளடக்குவது என்று பார்த்தல் கடையடைப்பே வசதியானது. நாலாவது காரணம்,அது வார இறுதி என்பதால் அன்றைக்கு வியாபாரம் பெரியளவு நடக்காது. எனவே வணிகர்கள் கடைகளை மூடச் சம்மதிப்பார்கள். ஐந்தாவது காரணம்,அன்றைக்கு ஒன்பதாம் ஆண்டுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு தனியார் வகுப்புகள் நடக்காது. எனவே அந்தக் கடையடைப்பால் பிள்ளைகளின் படிப்பு அதிகம் பாதிக்கப்படாது.ஆறாவது காரணம், வெள்ளிக்கிழமை என்பதனால் முஸ்லிம்களும் அந்நாளில் கடைகளை மூடத் தயார் என்பது.இக்காரணங்களினால் அந்த வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அதைவிட முக்கியமாக மூன்று காரணங்கள் உண்டு. முதலாவது காரணம், தமிழ் அரசியல்வாதிகளிடம் 2009க்குப் பின்னரான அறவழிப் போராட்டம் தொடர்பாக பொருத்தமான தரிசனங்கள் இல்லை என்பது. அவர்கள் போராடுவோம் போராடுவோம் என்று கூறுகிறார்கள்,ஆனால் எப்படிப் போராடுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.புதிய போராட்ட வடிவங்களைக் கண்டுபிடிக்க அவர்களால் முடியவில்லை.அதனால்தான் பழைய, வழக்கொழிந்த, அல்லது சிறு திரள்,கவனஈர்ப்புப் போராட்டங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.பெருந்திரள் மக்கள் போராட்டங்களை ஒழுங்குபடுத்த அவர்களால் முடியவில்லை.

இரண்டாவது காரணம்,அவர்களிடம் மக்களைத் திரட்டத் தேவையான அடிமட்டக் கட்டமைப்புக்கள் இல்லை.ஏற்கனவே பலமாக உள்ள கட்டமைப்புக்களில்தான் தங்கியிருக்கிறார்கள்.ஏற்கனவே உள்ள சிவில் கட்டமைப்புக்கள் சம்மதித்தால், ஒருநாள் வாழ்க்கையை ஒப்பீட்டளவில் முடக்கலாம்.உதாரணமாக வணிகர் கழகங்கள்,தனியார் வாகன உரிமையாளர்கள்,சந்தை நிர்வாகங்கள்…போன்றன ஒத்துழைத்தால் கடைகளை,சந்தைகளை மூடலாம்;பொதுப் போக்குவரத்தை முடக்கலாம்.

மூன்றாவது காரணம், அவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை. இதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால்,அவர்கள் தங்களுடைய மக்களுக்கு;தங்களுடைய அரசியல் இலக்குகளுக்கு விசுவாசமாக இல்லை.அதற்காக அர்ப்பணிப்போடு போராடத் தயாரில்லை. சிவப்பு மஞ்சள் கொடிகளைக் கட்டி, தாயகம்;தேசியம்;சுயநிர்ணயம்….என்று கோஷம் வைத்தால் தமிழ் மக்கள் தங்களின் பின் வருவார்கள் என்று கற்பனை செய்கிறார்கள். அல்லது ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட பெயர்களை முன்னிறுத்தி அல்லது ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட சின்னங்களை முன்னிறுத்தி வாக்குகளைத் திரட்ட ஆசைப்படுகிறார்கள். ஆனால் ஒரு புதிய சின்னத்தை ஒரு புதிய கொடியை அறிமுகப்படுத்தி அதற்காக அர்ப்பணித்து தம்மை உருக்கிப் போராடி அந்தச் சின்னத்தை,அந்தப் புதிய பெயரை மக்களுடைய மனங்களில் ஆழமாகப் பதிய வைக்க அவர்களால் முடியவில்லை. இந்த இயலாமைகள்தான் அரசியல்வாதிகள் தங்களுக்கு நோகாத போராட்டங்களை தேர்ந்தெடுக்க காரணம்.

தாங்கள் ரிஸ்க் எடுத்து;தாங்கள் முன்நின்று போராடத் தயாரில்லாத அரசியல் தலைவர்கள் மக்களுக்கும் நோகாமல் தங்களுக்கும் நோகாமல் எப்படிப் போராடுவது என்று சிந்தித்து கண்டுபிடித்த ஒரு போராட்டந்தான் கடையடைப்பா? கடந்த வாரம் அவர்கள் ஒழுங்குபடுத்திய மனிதச் சங்கிலிப் போராட்டம் போராட்டம் ஏன் வெற்றி பெறவில்லை என்பதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளாத கட்சிகள் மீண்டும் ஒரு தடவை தங்களுக்கு நோகாத ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனவா? ஏற்கனவே, இந்த ஆண்டு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கேட்டு ஒரு கடையடைப்பு நடத்தப்பட்டது. இப்பொழுது மேலுமொரு கடையடைப்பு.

எந்த ஒரு போராட்டமும்,அது ஆயுதப் போராட்டமாக இருந்தாலும் சரி,அகிம்சைப் போராட்டமாக இருந்தாலும் சரி,அது பிரதானமாக இரண்டு விளைவுகளை ஏற்படுத்த வேண்டும்.

முதலாவது விளைவு, அகவயமானது.அது மக்களை போராட்டத்தை நோக்கித் திரட்ட வேண்டும். குறிப்பிட்ட அமைப்பின் கீழ் அல்லது கட்சியின் கீழ் மக்கள் ஒரு திரண்ட சக்தியாக, ஆக்க சக்தியாக மாற்றப்பட வேண்டும். அந்த மக்கள் திரட்சிதான் எதிரியைப் பணிய வைக்கும்; வெளி உலகத்தைப் போராட்டத்தை நோக்கி ஈர்க்கும். எனவே எந்த ஒரு போராட்டமும் மக்களை ஒரு மையத்தில் திரட்டி மகத்தான ஆக்க சக்தியாக மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும்.

இரண்டாவது விளைவு புறவயமானது. அப்போராட்டமானது எதிர்த்தரப்புக்கு வலியை ஏற்படுத்த வேண்டும். சேதத்தை; தாக்கத்தை; இழப்பை ஏற்படுத்த வேண்டும்.எதிர்த் தரப்பின் பொருளாதாரத்தை அல்லது நிர்வாகத்தை முடக்க வேண்டும்.எந்த ஒரு போராட்டமும் எதிர்த் தரப்புக்கு தாக்கமான சேதத்தை ஏற்படுத்தவில்லையென்றால் அங்கே அரசியல் வலுச்சமநிலை மாறாது. அரசியல் வலுச்சமநிலையை மாற்றக்கூடிய சக்தி போராட்டத்திற்கு இருக்க வேண்டும்.

இந்த விளக்கத்தின் அடிப்படையில் கடையடைப்பு என்ற போராட்ட வடிவத்தைப் பார்ப்போம்.

இக்கட்டுரை கடையடைப்பை நிராகரிக்கவில்லை. கடையடைப்பில் ஒரு அடிப்படை நன்மை உண்டு. என்னவெனில்,மக்கள் தாமாக முன்வந்து கடைகளை மூடும்பொழுது அங்கே ஒரு கூட்டுணர்வு ஏற்படும்.ஒரு நாள் உழைப்பை இழப்பதற்கு தயாராகும் மக்கள் தங்களால் இயன்ற தியாகத்தை அன்றைக்குச் செய்கிறார்கள்.அதனால் வரும் இழப்பை ஏற்றுக் கொள்ளச் சித்தமாய் இருக்கிறார்கள்.எனவே போராட்ட நெருப்பை ஒரு சிறு அளவுக்கேனும் அணையாமல் வைத்திருக்க அந்த நாள் உதவும்.மக்களை குறைந்தபட்சம் ஒரு தேசமாகத் திரட்ட அது உதவும்.அதாவது கடையடைப்பால்,அகவயமான நன்மையுண்டு.

இந்த ஒரு நன்மைதான் கடையடைப்பில் உண்டு. மற்றும்படி ஒருநாள் கடையடைப்பு தமிழ் வணிகர்களுக்கும் அன்றாடம் உழைப்பவர்களுக்கும் ஏற்படுத்தக் கூடிய இழப்பை விடவும் அதிகரித்த இழப்பை அரசாங்கத்திற்கு ஏற்படுத்துமா? அல்லது அது உலகத்தை திரும்பிப் பார்க்க வைக்குமா?

கடந்த ஆண்டு டெல்லியில் விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடினார்கள்.ஆசிரியர்கள் அதிபர்கள் தொடர்ச்சியாகப் போராடினார்கள். கோட்டா கோகம போலவே விவசாயிகளின் போராட்டமும் உலகின் கவனத்தை ஈர்த்தது.முடிவில் இந்திய அரசாங்கம் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பணிந்தது.

ஆனால் ஏழு கட்சிகளின் ஒரு நாள் கடையடைப்பு அரசாங்கத்தைப் பணிய வைக்குமா? அல்லது தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரு விடயத்தை உலகத்துக்கும் அரசாங்கத்துக்கும் உணர்த்துவது மட்டும்தான் கடை யடைப்பின் நோக்கமா? அல்லது தமிழ்க் கட்சித் தலைவர்கள் நோகாமல் போராடுவதற்கு வசதியான ஒரு போராட்ட முறைதான் கடையடைப்பா?

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More