காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் சர்ச்சை நீடித்து வருகின்ற நிலையில் இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக அதிகாரிகளை கனடா மீளப் பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் எனவும், அவ்வாறு வெளியேற்றப்படாத அதிகாரிகளின் பொறுப்புகள் நீக்கப்படும் எனவும் இந்தியா ஒருதலைப்பட்சமாக கூறியிருந்ததாகவும் இவ்வாறான செயற்பாடு முன்னெப்போதும் நிகழ்ந்திராதது எனவும் கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி குறிப்பிட்டுள்ளார்.
இது தூதரக அதிகார உறவுகள் குறித்த வியன்னா மாநாட்டு ஒப்பந்தத்தை மீறிய செயல் என கூறியுள்ள மெலனி ஜோலி, தூதரக அதிகார விவகாரங்களின் விதிகளை உடைக்க அனுமதித்தால், எந்த ஓர் இடத்திலும் எந்த தூதரக அதிகாரியும் பாதுகாப்பாக இருக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இததேவேளை இந்தியாவிற்கான பயண ஆலோசனையையும் கனடா வெளியிட்டுள்ளது. கனடா – இந்தியா இடையிலான இந்த மோதலால், கனடாவுக்கு எதிரான போராட்டங்களுக்கான அழைப்பும் அவதூறும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இடம்பெற்று வருகின்றன.
கனடாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் போரட்டங்களும் நிகழலாம். கனடா மக்கள், மிரட்டல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாகலாம். தலைநகரான டெல்லியில் கனடா மக்கள் தங்களை எங்கும் வெளிப்படுத்திக் கொள்ளாமலும் உங்களின் தனிப்பட்ட விபரங்களைப் புதியவர்களிடம் பகிராமலும் இருக்க வேண்டும் என கனடா வௌியிட்டுள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிஸ்தான் பிரிவனைவாதி ஹா்தீப் சிங் நிஜாா், கனடாவில் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளதனால் இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது