முல்லைத்தீவு – நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) அவது உடல் மீட்கப்பட்டுள்ளதுடன் அவரது கணவா் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளாா் வயது 23 வயதான த.கீதா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.
புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த குறித்த பெண் என்பவா் முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த ஒருவரை மணம் முடித்து நீராவிபிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்பாக குழி தோண்டி புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தினை முள்ளியவளை காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த இளம் குடும்ப பெண் தொலைபேசியில் தனது தாயாரிடம் நாளாந்தம் உரையாடுவதாகவும் கடந்த 21.10.2023 திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்ட நிலையில் 23 ஆம் திகதி மகளும் மருமகனும் வசிக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்பட்டதனால் சந்தேகம் அடைந்த குறித்த பெண்ணின் தாயாரால் முள்ளியவளை காவல் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு செய்ததனையட்டது. இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினா் உயிரிழந்த பெண்ணின் கணவரை வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக குறித்த பெண்ணை அவரது கணவர் கொலை செய்து புதைத்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக முள்ளியவளை காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.