பயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இருவரது பெயர்கள் குறித்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
வவுனியா – வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த நிக்லஸ்பிள்ளை அன்டனி எமில் லக்ஸ்மி காந்தன் மற்றும் யாழ் நல்லூரைச் சேர்ந்த முருகேசு ஶ்ரீ சண்முகராஜா ஆகியோரது பெயர்களே இவ்வாறு தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி குறித்த இருவரும் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக ராடா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த எமில் காந்தனுக்கு 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி சர்வதேச காவல்துறையினா் சிவப்பு பிடியாணை பிறபித்திருந்தனர். எனினும், 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி எமில் காந்தன் குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
1998 ஆம் ஆண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை களுத்துறை சிறைச்சாலையில் வைத்து கொலை செய்ய முயன்றதாக எமில் காந்தன் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், பின்னர் அவர் அந்த வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்டிருந்தார்