389
நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்கே முன்னுரிமை அளிப்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்திற்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீவகப் பிரதேசங்களுக்கான போக்குவரத்து தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அதிகாரிகள்,
நயினாதீவிற்கும் குறிகட்டுவானுக்கும் இடையிலான போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பாரிய தனியார் பயணிகள் படகு குறிகட்டுவான் இறங்கு துறையில் நீண்ட நேரம் தரித்து நிற்பதால், நெடுந்தீவிற்கான பயணிகள் படகு சேவையை சீரான முறையில் உரிய நேரத்திற்கு முன்னெடுக்க முடிவதில்லை எனவும், இதனால் அரச உத்தியோகஸ்தர்களும் பயணிகளும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
அதன் போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விவகாரம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி, நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற அசௌகரியங்களை களையுமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
Spread the love