கேரள மாநிலத்தில் யெகோவா ஜெபக் கூட்டத்தின்போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார், 36 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கொச்சியில் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாடு கடந்த 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று (அக்டோபர் 29) காலையில் இந்த மாநாட்டின் பிரார்த்தனைக் கூட்டம் நடந்துகொண்டிருந்த போது, மாநாட்டிற்குள் சில முறை வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்பு மொத்தம் மூன்று இடங்களில் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை பிரார்த்தனை முடிந்த உடனேயே மண்டபத்தில் முதல் வெடிப்பு நிகழ்ந்ததாகவும், அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு முறை என மூன்று முறை குண்டுவெடிப்பு நடந்ததாகவும் தேவாலயத்தின் உள்ளூர் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகுமார் கூறினார்.
கேரளாவில் ஏற்பட்டது குண்டுவெடிப்பு சம்பவம், அது விபத்து அல்ல என்று காவல் டி.ஜி.பி டாக்டர் ஷைக் தர்வேஷ் சாஹேப் உறுதிப்படுத்தியுள்ளார்.
காவல்துறை டி.ஜி.பி. என்ன கூறினார்?
தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்று காலை 9.40 மணிக்கு வெடிப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார். 36 பேர் காயமடைந்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் IED (improvised Explosive Device-கையால் உருவாக்கப்பட்ட சக்தி குறைவான வெடிகுண்டு) பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
நாங்கள் எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். இதற்குப் பின்னால் யார் இருக்கிறார் எனக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டுகிறேன். வெறுப்பைத் தூண்டும் வண்ணம் யாரும் சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம். அப்படிச் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
இன்றைய நிகழ்ச்சிகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கின. 9.40க்கு பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனை முடிந்ததும் சுமார் 2500 பேர் குழுமியிருந்த மண்டபத்தின் மையப் பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது அனைவரும் அரங்கில் நின்று கொண்டிருந்தனர்.
அடுத்தடுத்து மூன்று முறை வெடிப்பு நிகழ்ந்தது. முதல் வெடிப்புக்குப் பிறகு, மண்டபத்தின் இடது மற்றும் வலது பக்கங்களில் வெடிப்பு ஏற்பட்டன.
ஒருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உடனடியாக உயிரிழந்தார். மண்டபத்தில் இருந்த பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், “இது மிகவும் மோசமான நிகழ்வு. காவல்துறையினர் இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மாநில காவல்துறை டி.ஜி.பி உட்பட உயர் அதிகாரிகள் கொச்சிக்கு சென்றுள்ளனர். காயமடைந்தவர்களில் இரண்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் இந்த சம்பவம் குறித்து பேசினார் . தேசிய புலனாய்வு முகமை மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார்.
“எரிவாயு சிலிண்டர் வெடிப்பு அல்லது அதுபோன்ற எதுவும் இல்லை. இரண்டு தொலைக்காட்சிகள் மட்டுமே அரங்கில் இருந்தன. அதிலிருந்து ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டாலும், அதுபோன்ற வெடிப்பு ஏற்படாது. தற்போது சம்பவம் நடந்த இடத்தை காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்,” என்று தேவாலயத்தின் உள்ளூர் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகுமார் கூறினார்.
திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், “கேரளாவில் யெகோவா ஜெபக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்பதில் அனைத்து மத தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும்,” என்று தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் வி டி சதீசன் இந்த சம்பவம் மர்மமானதாக இருப்பதாகத் தெரிவித்தார். முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
தேசிய புலனாய்வு முகமை இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார் நிலையில் இருக்க காவல்துறை டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.
பொதுக்கூட்டங்கள் மற்றும் அரசியல் கூட்டங்களைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கேரள தீவிரவாத தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்தில் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க தீக்காய சிகிச்சை மருத்துவர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவின்படி கொச்சி சென்றுள்ளனர்.
BBC Tamil