358
13 ஆவது திருத்த ச்சட்டம் என்பது, தமிழ் மக்கள் உரிமை உள்ளவர்களாக இந்த நாட்டில் மனிதர்களாக வாழக்கூடிய ஒரு நிலைமையினை உருவாக்க முடியும் என்பதில் தேசிய மக்கள் சக்தி திடமாக உள்ளது என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ஆர். சந்திரசேகரன் தெரிவித்தார்.
யாழில் உள்ள தமது அலுவலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
நாட்டினுடைய தேசிய பிரச்சினை என்பது 75 வருடங்களாக இருக்கின்ற பிரச்சனை. பிரச்சினைக்கு யார் காரணம் என பார்த்தால் நாட்டினுடைய ஆட்சியாளர்கள் தான் காரணம். கடந்த கால ஆட்சியாளர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தமிழ் கட்சிகள் உடந்தையாக இருந்திருக்கின்றார்கள். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி அல்லது தேசிய மக்கள் சக்தி நாட்டில் ஆட்சி செய்யவில்லை.
தமிழ் மக்கள் தீர்வினை எதிர்பார்க்கின்றார்கள். தலை நிமிர்ந்து தன்மானம் உள்ள தமிழனாக வாழ வேண்டும் என விரும்புகிறார்கள்.அதற்காக 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்திலும் ஈடுபட்டிருந்தார்கள். யுத்தம் தோல்வி அடைந்திருக்கின்றது. பின்னர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். போராட்டங்களும் தோல்வி அடைந்திருக்கின்றது.
நாங்களும் இரண்டு தடவைகள் இந்த நாட்டில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். அந்தப் போராட்டத்தில் தோல்வியடைந்தோம். எங்களுடைய பத்தாயிரத்துக்கும் அதிகமான எமது இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இந்த நிலையில் , 13 ஆவது திருத்த ச்சட்டம் என்பது, தமிழ் மக்கள் உரிமை உள்ளவர்களாக இந்த நாட்டில் மனிதர்களாக வாழக்கூடிய ஒரு நிலைமையினை உருவாக்க முடியும் என்பதில் தேசிய மக்கள் சக்தி திடமாக உள்ளது.
எனவே நீண்டு நிலைக்கக்கூடிய நிரந்தரமான தீர்வுக்காக புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் வரைக்கும் இந்த மாகாண சபையினை தொடர்ந்து பேண வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும் என்றார்.
Spread the love