ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பன தொடர்பில் அதீத கவனம் செலுத்தப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகள் மூவரால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
இந்த இரு சட்டமூலங்களும் சர்வதேச தரங்கள் மற்றும் சட்டத்திற்கு இணங்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் கருத்து வௌியிடுவதற்கான சுதந்திரத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான விசேட பிரதிநிதி, அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் மற்றும் செயற்படுதலுக்கான உரிமைகளை பாதுகாப்பதற்கான விசேட பிரதிநிதி மற்றும் தனியார் உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி ஆகியோரால் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் தொடர்பிலான உலகளாவிய பிரகடனம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தினால் பாதுகாக்கப்பட்ட தனிநபருக்கான உரிமைகள், கருத்து வௌியிடுவதற்கு காணப்படும் உரிமை மற்றும் அமைதியாக ஒன்றுகூடுதலுக்கான உரிமை என்பன இந்த இரண்டு சட்டமூலங்களாலும் மீறப்படுவதாக
அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட இரு உலகளாவிய பிரகடனங்களிலும் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதாக ஐ.நா விசேட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ள பல விடயங்கள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரடனங்களின் மூலம் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை நிறைவேற்றவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த இரு சட்டமூலங்களையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பொதுமக்களின் கருத்தைக் கேட்டறிந்த பின்னர் முறையாக மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஐ.நா விசேட பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.