பொன்னாலையில் வசிக்கும் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கடற்றொழிலும் கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்படும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என சமூக செயற்பாட்டாளர் ந.பொன்ராசா தெரிவித்தார்.
வனவளங்கள் திணைக்களம் அராலி தொடக்கம் பொன்னாலை வரையான 354 ஏக்கர் கடற்கரையோர பிரதேசத்தை ஆக்கிரமிப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக மக்கள் கருத்தறியும் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை வலி.மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பொன்னாலையில் உள்ள பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பொன்னாலை பரவைக் கடலையே தமது வாழ்வாதாரமாக நம்பியிருக்கின்றனர். மேலும் அதிக குடும்பங்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர்.
வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் கடற்கரையோரத்தை சுவீகரிக்குமாயின் கடற்றொழிலாளரின் சுதந்திரமான கடற்றொழில் பாதிக்கப்படும்.
எமது மக்கள் தாம் நினைத்த நேரம் நினைத்த பாதையால் கடலுக்கு செல்வார்கள். நினைத்த நேரம் வீச்சுவலை போன்ற தொழில்களுக்கு செல்வார்கள்.
வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் கடற்கரையை சுவீகரித்தால் தொழிலாளர்கள் இவ்வாறு செயற்பட முடியாது.
கடும் கட்டுப்பாடுகள் மற்றும் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்.
மேலும், பொன்னாலைக் கடலில் உள்ள மண் திட்டியான துருத்திப்பிட்டியையும் மேற்படி திணைக்களம் சுவீகரிக்கப்போவதாக அறிவித்திருக்கின்றது.
இது கால்நடைகளில் மேச்சல் தரை. மாடுகள் கடல் பகுதியால் நடந்து சென்று இங்கு மேய்ந்துவிட்டு மாலையில் வீடு திரும்பும்.
அத்துடன் கடற்றொழிலாளர்கள் வலைகளை உலர்த்துவதற்கும் இந்த இடத்தை
பயன்னபடுத்துகின்றனர். இதை சுவீகரிப்பதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்.
பொன்னாலை இந்து மயானம் மற்றும் மேய்ச்சல் தரவை, மாட்டுவண்டிச் சவாரித்திடல் போன்றனவும் கடற்கரையோரமாகவே இருக்கின்றது.
மேற்படி திணைக்களம் கடற்கரையை சுவீகரித்தால் மக்கள் இங்கு எந்த நேரத்திலும் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் கருதுவது போன்று கடலில் கண்டல் தாவரங்களை நாட்டுவதாயின் அதை எமது சமூகமட்ட அமைப்புக்கள் ஊடாக நாம் செயற்படுத்துவோம். அதை விடுத்து பொன்னாலையின் கடற்கரையை சுவீகரிப்பதற்கு நாம் அனுதிக்க மாட்டோம்.
யுத்தம் காரணமாக பெரும் பாதிப்பை எதிர்நோக்கிய மக்கள் தற்போதுதான் ஓரளவு நிம்மதியாக வாழ்கின்றனர். அந்த நிம்மதியை யாரும் குழப்பவேண்டாம் எனத் தெரிவித்தார்.