களுத்துறையை அச்சுறுத்திய தொடங்கொட ‘புஸ்கொடா’ மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு மன்னா கத்திகளுடன் களுத்துறை பிரதேசத்தில் பல இடங்களில் பல கொள்ளைச் சம்பவங்களை நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர்கள் இருவரே கைது செய்யப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு மணி நேரத்தில், சந்தேகநபர்கள் இருவருமாக இணைந்து கைப்பேசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவரின் காலில் வெட்டி, 150,000 ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான சிம்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பின்னர், பண்டாரகம தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்திற்கு அருகில் நபரொருவரை மன்னா கத்தியால் தாக்கி அவரிடம் இருந்து 150,000 ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட நிலையில் கோனதுவ எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்களை அச்சுறுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
தொடங்கொட ‘புஸ்கொட’ என அழைக்கப்படும் தொடங்கொட பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரும் அவரது 18 வயது உதவியாளருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் இராணுவத்தின் கஜபா படையணியின் முன்னாள் சிப்பாய் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்த போது, அவர்களிடம் இருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது, குற்றச் செயல்களுக்கு பயன்படுத்திய இரண்டு மன்னா கத்திகளும், பண்டாரகமவில் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் வசம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.