கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்குடனையே தெல்லிப்பழை தாக்குதல் சம்பவம் ந்டைபெற்றதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
யாழில்.இயங்கும் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் நீண்ட காலமாக மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
வன்முறை கும்பல் ஒன்றை சேர்ந்த ஒருவர் கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது மனைவியை பார்வையிட சென்ற போது , வைத்தியசாலைக்கு அண்மையில் வைத்து, அவர் மீது மற்றைய வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் வாள் வெட்டு தாக்குதல் நடாத்தி இருந்தனர்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தெல்லிப்பழை காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது சகோதரியை பார்வையிட சென்ற மற்றைய வன்முறை கும்பலை சேர்ந்த நபர் மீது, கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு பழிவாங்கும் முகமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த மூவர் கைது செய்யப்பட்டதுடன், தாக்குதலாளிகள் பயணித்த ஹயஸ் ரக வாகனத்தையும் காவற்துறையினர் நேற்றைய தினம் புதன்கிழமை (06.12.23) புதுக்குடியிருப்பில் மீட்டு இருந்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே, குறித்த தாக்குதல் பழிவாங்கும் தாக்குதல் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களையும் கைது செய்ய காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், தாக்குதலாளிகள் பயணித்த ஹயஸ் ரக வாகனத்தின் மீது காவற்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் வாகனத்தில் துப்பாக்கி சூடுகள் காணப்பட்ட பாகங்களை மாற்றுவதற்கு , முயன்றுள்ளமையும் காவற்துறையினரால் கண்டறியப்பட்டுளள்து.
கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்து இரண்டு வாள்கள், முகத்தினை மூடி கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கறுப்பு நிற துணிகள் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.