பாலஸ்தீனம் ஒரு நாடு மட்டுமல்ல
பாலஸ்தீனம் ஒரு நாடு
மட்டுமல்ல
அது ஓர் அடையாளம்
அது ஓர் ஆதர்சம்
அது ஒரு படிப்பினை
அதன் வாழ்க்கை
மீட்கப்பட வேண்டியது
சாதி மதம் பால் இனம்
எனப் பிரிவினைகள் கடந்து
ஏற்றத்தாழ்வுகள் நீங்கி
மீட்கப்பட வேண்டியது
மீளுருவாக்கப்பட வேண்டியது
இடிபாடுகள் இடையிலும் இடிபாடுகள் மீதும்
வாயிலும் வயிற்றிலும் அடித்துப் புலம்பும் பெண்கள்
கொல்லப்பட்டவர்களின் உடலங்களுடன்
குமுறிச் செல்லும் ஆண்கள்
இறந்தும் காயப்பட்டும்
குண்டு வீச்சின் புழுதி படிந்த உடலுடனும்
முகங்களுடனும்
அச்சத்தில் உறைந்து போயும்
அதிர்ச்சியில் உடல் பதறியபடியும் சிறுவர்
உலகச் செய்திகளில்
அச்சிலும் மின் ஊடகங்களிலும்
எனது சிறுபராயம் முதலான பதிவுகள்
முடிவுக்கு வரவேண்டிய துயரங்கள்
தொடரப்படவே கூடாத அவலங்கள்
எனது வாழ்வின் நாற்பது வருடங்கள்
அழிவிலும் அனர்த்தத்திலும்
இடப்பெயர்விலும் அகதி வாழ்விலும்
அச்சத்திலும் கூனிக் குறுகிப் போதலிலும்
இன்னும் மீள முடியாத மன அழுத்தங்களிலும்
உடலிலும் உள்ளத்திலும் மீள முடியா
சொல்லி விளங்காத
துன்பத்திலும் துயரத்திலும்
இனியும் வேண்டாம் எவருக்கும் வேண்டாம்
இங்கும் வேண்டாம் எங்கும் வேண்டாம்
பலஸ்தீனம் ஒரு நாடு
மட்டுமல்ல
அது ஒரு அடையாளம்
அது ஒரு ஆதர்சம்
அது ஒரு படிப்பினை
அதன் வாழ்க்கை மீட்கப்பட வேண்டியது
உலக வரைபடத்தின்
அறிந்தும் அறியாததுமான நாடுகளில் இருந்து
புவியியற் பரப்புகளில் இருந்து
ஒவ்வொரு பாலஸ்தீனமும் மீட்கப்பட வேண்டியது
பாதுகாப்பிற்காகக் கொல்லுபவர்கள்
சித்திரவதை செய்பவர்கள் அச்சுறுத்துபவர்கள்
அச்சமூட்டுபவர்களின்
அதிகாரம்
மனிதத்திற்கு ஆபத்தானது
மனிதர்களுக்கு அழிவையே தருவது
பாலஸ்தீனம் ஒரு நாடு
மட்டுமல்ல
அது ஒரு அடையாளம்
அது ஒரு ஆதர்சம்
அது ஒரு படிப்பினை
சி.ஜெயசங்கர்