முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணையாளர்கள், தமது மாடுகளுக்கான பண்ணைப்பதிவுச்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் கிருஜகலா சிவானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” பண்ணையாளர்கள் தமது மாட்டுப் பண்ணைகளை பதிவுசெய்ய வேண்டியதும் தங்களால் வளர்க்கப்படும் சகல மாடுகளுக்கும் காதுப்பட்டி பொருத்துதலும் மிக முக்கியமானது.
இலங்கையிலுள்ள பண்ணைகளில் மாடுகளின் பண்ணைகள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பது 2008ம் ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பண்ணையாளர்கள் இதில் ஆர்வமற்று இருந்து வருகின்றனர்.
தற்போது Online மூலமும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக விலங்குகளுக்கு காது இலக்கம் பொருத்தப்பட்டு பண்ணைகள் பதிவு செய்வதனால் ”நாட்டிலுள்ள கால்நடைகளின் எண்ணிக்கையை சரியாக கணிக்க முடிவதோடு, கால்நடைகள் களவாடப்படுதலையும் தடுக்க முடியும்.
அதுமட்டுமல்லாது கால்நடைகள் பற்றிய பல்வேறு தகவல்களை ஆராய்ந்து பண்ணைகளின் முன்னேற்றத்தையும் உற்பத்தியையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
மேலும் இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புக்களுக்காக இழப்பீடுகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.