யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பொருத்தமான இடங்களில் புளியமரங்களை நாட்டுமாறு பிரதேச செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை மாவட்ட செயலாளர் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஐம்பது ஆண்டுகளில் பயன்தரு புளியமரம் நாட்டியதாக வரலாறு இல்லை. தற்போது உள்ள புளியமரங்கள் எல்லாமே இயற்கையாக விதை மூலம் பரவியதே. அவையும் தற்போது வெட்டப்பட்டு கொண்டிருக்கிறது.
தற்போது நாட்டுக்கு தேவையான புளி இறக்குமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் பொருத்தமான இடங்களில் புளியமரங்களை நாட்டுமாறு பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் உதவியை கோரியுள்ளேன். எதிர்காலத்தில் புளிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும். தற்போது புளியமரத்தை நாட்டினால் பத்து பதினைந்து வருடங்களில் புளிக்கு தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கே உரித்தான பாரம்பரிய பழ மரங்கள் வெட்டப்படுகிறது. மா மரம், பலா மரம் என்பன வெட்டப்படுகிறது. இது தொடர்பில் எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படும்.பாரம்பரிய பழ மரங்களை பாதுகாக்க வேண்டிய தேவை காணப்படுகிறது -என்றார்.