ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொள்ள தெமட்டகொட, மாளிகாவத்தை, வனாத்தமுல்லை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு பண தொகையுடனான வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜயகொட,
பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக வவுச்சர்கள் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தின் பிரகாரமே மக்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு முடியும் வரை தங்கியிருப்பவர்களுக்கு மாத்திரம் வவுச்சர்கள் வழங்கப்படும் பொதுஜன பெரமுன மக்களிடம் கூறியுள்ளது.
மக்களை ஏமாற்றியே கடந்தகாலம் முழுவதும் பொதுஜன பெரமுன ஆட்சி செய்துள்ளது. அதனையே மீண்டும் மீண்டும் செய்கின்றனர். ஆனால், இந்த நாட்டை அதலபாதாளத்துக்குள் தள்ளிய அவர்களை இனியும் மக்கள் நம்ப தயார் இல்லை. இதனால் மக்களுக்கு வவுச்சர்கள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.