1.5K
கூற்றுவனின் கொடிய வரிகளோ
ஒருசோடி சப்பாத்துகளின் கீழோரங்களில்…
ஒருசோடி சப்பாத்துகளின்
கீழோர வரிகள் அச்சந்தருவன.
தடை செய்யப்பட வேண்டிய
பயங்கரவாதக் கூற்றுக்களாக
கண்ணிற்பட்டு
புத்தியில் தெறிக்கின்றன!
உடலிற்கு உள்ளத்திற்கு
ஆகாதவை எனினும்
விளையாட்டு அரங்கங்களில்
விளையாட்டு வீரர்களின் வார்த்தைகளில்
நிர்வாணம் மறைக்கும்
ஆடைகளென
மேனிமறைக்கும்
விளம்பரங்கள்! விளம்பரங்கள்!
இயல்பு முகத்தை இழந்தன
விளையாட்டுகள்.
வணிகமும் வணிக விளம்பரமும்
ஆனதொரு விளையாட்டு உலகில்
ஒரு சோடி சப்பாத்துகளின்
கீழோர வரிகள்
யாருக்குத்தான் ஆயிற்று
கூற்றுவமாக?!
உஸ்மான் கவாஜா ‘கிரிக்கெட்’டில் வீரர்
அவர் தெரிந்தெடுத்த வரிகள்
ஒருகோடி சப்பாத்துகளில்
ஒருசோடி சப்பாத்துகளின்
கீழோரங்களில்
மூன்றாம் பிறைபோல
மெல்லிதாய்
காட்சிக்கு அருந்தலாய்
எனினும்
கூற்றுவனின் வரிகளாக
யாருக்குத்தான் ஆகிப்போயிற்று?
“உயிர்கள் எல்லாம் சமானமானவை”
“விடுதலை என்பது மனித உரிமை”
மனிதத்தின் அரிச்சுவடிகள்
யாருக்குத்தான் ஆகிப்போயிற்று
கூற்றுவனின் கொடிய வரிகளாக….?!
“யானோ அரசன்?! யானே கள்வன்?!”
சி.ஜெயசங்கர்
Spread the love