யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு சீரான போக்குவரத்துக்கு வசதிகளை செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு நோக்கி நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை 5.15 மணிக்கு புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் கைதடி சித்த வைத்தியசாலைக்கு முன் பழுதடைந்து மேற்கொண்டு பயணிக்கமுடியாமல் நின்றது. அதனால் பயணிகள் தமது பயணத்தை தொடர முடியாது நீண்ட நேரம் காத்திருந்து வேறு பேருந்தில் பயணித்தனர்.
யாழ்ப்பாணம் கட்டைக்காடு சுமார் 70 கிலோமீற்றர் தூரத்தைக்கொண்டது.இவ்வாறான தூர பிரதேசத்துக்கு நல்ல நிலையில் உள்ள பேருந்தை விடாமல் மிகவும் பழுதான பேருந்து சேவையில் ஈடுபடுவதாக நாளாந்தம் பயணம் செய்யும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக வடமராட்சி கிழக்குக்கான இ.போ.ச.பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஆகவே இது தொடர்பில் உரிய தரப்புக்கள், அரசியல் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.