யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை டெங்கு நோயினால் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள நிலையில் , நேற்றைய தினம் மாத்திரம் 40 பேர் டெங்கு காய்ச்சலுடன் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்.
டிசம்பர் மாதத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வரையில் 945 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளதுடன் நேற்றைய தினம் 40 டெங்கு நோயாளிகளுக்கு மேல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை குழந்தைகள் விடுதி டெங்கு நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.
எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் உடல்நிலை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.
யாழ்ப்பாணம், கோப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேசங்களில் டெங்கு நூளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றன.
அதனால், பொதுமக்கள் தங்கள் சார்ந்த இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒருவருக்கு காய்ச்சல் எற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடுவது சால சிறந்தது என்றார்.