கடந்த 24ஆம் திகதி இரவு பதினோரு மணிக்கு அதாவது நத்தார் பிறப்புக்கு முன், மட்டக்களப்பில் ஒரு சோகமான சம்பவம் இடம்பெற்றது.42 வயதான ஒரு குடும்பஸ்தர் கல்லடி பாலத்தில் இருந்து வாவிக்குள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.ஆனால் நீரில் மூழ்கத் தொடங்கியதும் சாகப் பயந்து பாலத்தின் தூண் ஒன்றைப் பிடித்துக் கொண்டு தத்தளித்திருக்கிறார்.படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் அவரைக் காப்பாற்றினார்கள்.போலீஸ் அவரை தற்கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்திருக்கிறது.அவர் ஒரு ஏழை மேசன்.ஐந்து பிள்ளைகளின் தந்தை.கட்டிடப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால்,அவருக்கு தொழில் இல்லை.நத்தார் சீசனை முன்னிட்டு ஆடைகள் வாங்கக் காசு இல்லை.வீட்டில் மனைவி நச்சரித்திருக்கிறார்.எனவே, வாழ்க்கை வெறுத்துப்போன அக்குடும்பத் தலைவர்,இயேசு நாதர் பிறந்த நாள் எனது இறந்த நாளாக அமையட்டும் என்று கூறி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்.இயேசு பிறப்பை தனது இறப்பாக அறிவிக்கும் அளவுக்கு ஒரு ஏழை கிறிஸ்தவரை வறுமை தாக்கியிருக்கிறது.இதுதான் நாட்டில் ஆண்டு இறுதி நிலவரம்.
நாட்டில் நத்தார் மரத்தின் விலையை வைத்து நாட்டின் பொருளாதாரத்தை மதிப்பிடலாம்.டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஒன்றரை அடி உயரமான ஒரு நாத்தார் மரம் கிட்டத்தட்ட 3500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.எனினும் ஒரு கிழமைக்கு பின் சுமார் 4 அடி உயரமான நத்தார் மரம் 6000 ரூபாய்க்கு வந்தது. ஆனால் முட்டை விலை குறையவில்லை.கூடியது.ஒரு மூட்டை 60ரூபாய். இம்முறை பெரும்பாலான எழைகளின் வீடுகளில் கேக் இல்லாத கிறிஸ்மஸ்தான்.
முட்டை விலை மட்டுமல்ல பச்சை மிளகாய், தக்காளி உள்ளிட்ட அனைத்து மரக்கறிகளின் விலைகளும் உயர்ந்து விட்டன.வழமையாக கிறிஸ்மஸ் சீசனில் மரக்கறி விலைகள் உயர்வதுண்டு.தைப் பிறப்போடு குறைவதுண்டு. ஆனாலும் இம்முறை விலை உயர்வு அசாதாரணமாகக் காணப்பட்டது.பச்சை மிளகாய் ஒரு கிலோ 1400 ரூபாயிலிருந்து 2000 ரூபாய்வரை போனது.வெங்காயம் தக்காளியின் விலைகளும் அதிகம். சிங்கள யூ டியூப்பர்கள் மரக்கறி விலை உயர்வைக் காட்ட சில வேடிக்கையான காணொளிகளை வெளியிட்டார்கள்.அதில் ஒரு காணொளியில் ஒரு பச்சை மிளகாயை நூலில் கட்டி கறிக்குள் போடுகிறார்கள். கறி காய்சியதும் அதை எடுத்து மற்றொரு கறிக்குள் போடுகிறார்கள். வேறு ஒரு காணொளியில் ஐந்தாறு பச்சை மிளகாய்கள் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் ஒரு தக்காளிப் பழம் மட்டும். அதாவது ஒரு தக்காளி பழத்தின் பெறுமதிதான் ஐந்தாறு பச்சை மிளகாய்கள் என்று பொருள்.இப்படித்தான் இம்முறை நாட்டில் ஆண்டிறுதி அமைந்தது.
இந்த லட்சணத்தில் அடுத்த ஆண்டு நெல் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று விவசாயிகள் எச்சரிக்கிறார்கள்.நெற் பயிர்களைத் தாக்கும் வெள்ளைத் தத்தியை அழிப்பதற்கு விவசாயத் திணைக்களம் முயற்சிக்கவில்லை என்றும் அதனால் விளைச்சல் பாதிக்கப்படலாம் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். அதாவது பழைய ஆண்டு நல்ல செய்திகளோடு முடியவில்லை. புதிய ஆண்டும் நல்ல செய்திகளோடு பிறக்கவில்லை என்று பொருள்.
புதிய ஆண்டில்,அரசாங்கம் வற் வரியை அதிகரிக்க உள்ளது.இருபது ஆண்டுகளில்,ஆகப்பெரிய வரி அதிகரிப்பு இது.புதிய ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிந்து வரிசெலுத்துனர் அடையாள இலக்கத்தை வைத்திருப்பது கட்டாயமாகும்.அவ்வாறு பதிவு செய்யாதிருப்பது 50,000 ரூபாய்க்குக் கூடாத அபராதத்தை விதிக்கக்கூடிய தண்டனைக்குரிய குற்றம் என்று ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது.
புதிய ஆண்டு வரி அதிகரிப்பின் ஆண்டாக மட்டும் அமையப் போவதில்லை. அது ஒரு தேர்தல் ஆண்டாகவும் அமையப் போகின்றது என்பதுதான் இலங்கைத் தீவின் அரசியல் அவலம்.ஆண்டின் தொடக்கத்தில் தமிழரசு கட்சிக்குள் தலைவர் யார் என்பதற்குத் தேர்தல் நடக்கும்.ஆண்டின் இறுதியில் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல்.ஒரு தேர்தலில் தொடங்கி மற்றொரு தேர்தலில் முடியப்போகும் ஆண்டு.
நாடு இப்போதுள்ள நிலையில்;தமிழரசியல் இப்போதுள்ள நிலையில்; தமிழரசுக் கட்சிக்குள் ஒரு தேர்தல் அவசியமா?என்று ஒரு நண்பர் கேட்டார்.கடந்த 15 ஆண்டுகளாக தமிழரசுக் கட்சி தமிழ்மக்களுக்கு எதைப் பெற்று தந்திருக்கின்றது? எதையுமே பெற்று தரவில்லை. அதற்கு அதன் தலைமைதான் காரணமா?ஒரு புதிய தலைமை கிடைத்துவிட்டால்,தமிழரசுக் கட்சி அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்திவிடும் என்று எதிர்பார்க்கலாமா ? என்றும் அவர் கேட்டார்.
உண்மைதான். தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது நடப்பவை யாவும் கடந்த 15 ஆண்டுகாலத் தோல்வியின் விளைவுகளே.அந்தத் தோல்விக்கு எல்லாருமே கூட்டுப்பொறுப்பு.இப்பொழுது தலைமைப் பதவிக்காகப் போட்டியிடும் அனைவருமே அதற்குக் கூட்டுப்பொறுப்பு.தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள மிகப்பெரிய கட்சி அது என்ற அடிப்படையில்,அக்கட்சியின் தோல்விதான் தமிழரசியலின் தோல்வியும் எனலாம்.அக்கட்சியின் எல்லா மூத்த தலைவர்களும் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும்.இவர்களில் யார் தெரிவு செய்யப்பட்டாலும் தமிழரசியலை வெற்றிப்பாதையில் செலுத்த முடியுமா?
யார் தலைவராக வந்தாலும் அவர்கள் முன் இரண்டு பெரிய பொறுப்புக்கள் உண்டு. முதலாவது பொறுப்பு, கடந்த 15 ஆண்டுகளாக உடைந்து உடைந்து சிறுத்துக் கொண்டு வரும் தமிழ் ஐக்கியத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் ஐக்கியம் உடைந்து போனதற்கு தமிழரசுக் கட்சி தான் பெரும் பொறுப்பு. அக்கட்சி ஏனைய கட்சிகளை அவமதித்தது, அல்லது ஏனைய கட்சிகளுக்குள்ளால் தேர்தல் கேட்டு வெற்றி பெற்றவர்களை உருவி எடுத்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டது. இவ்வாறு, தான் ஒரு பெரிய கட்சி என்ற அடிப்படையில் மூத்த கட்சி என்று அடிப்படையில்,அதற்குரிய பக்குவத்தோடு பெருந்தன்மையோடு தமிழரசுக் கட்சி நடந்து கொள்ளவில்லை.
தன்னுடைய பெயருக்குத்தான், தன்னுடைய சின்னதுக்குத்தான் தமிழ் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்று தமிழரசுக் கட்சி நம்பியது. தான் ஒரு தும்புத் தடியை தேர்தலில் முன்னிறுத்தினாலும் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பார்கள் என்று தமிழரசுக் கட்சி திமிரோடு நம்பியது.அதனால் ஏனைய பங்காளிக் கட்சிகள் தன்னுடைய பலத்தில்தான் கூட்டமைப்புக்குள் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் கருதியது.அதனால் பங்காளிக் கட்சிகளை அவமதித்தது;புறக்கணித்தது;ஒன்றாக இருக்க முடியாதபடி அவமானகரமான ஒரு சூழலை ஏற்படுத்தியது.விளைவாக, ஐக்கியம் உடைந்தது; கூட்டமைப்பு சிதைந்தது. இப்பொழுது தமிழரசு கட்சிக்குள்ளேயே உடைவுகள் சிதைவுகள் உருவாகிவிட்டன.எனவே ஒரு மூத்த பழம்பெரும் கட்சியின் தலைவராக வரப் போகும் ஒருவர் முதலில் உடைந்து சிதறிய ஐக்கியத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும்.
அதன்பின்,அடுத்த கட்டமாக தமிழ் மக்களின் அரசியல் இலக்கை வென்றெடுப்பதற்கான வழி வரைபடத்தை தயாரிக்க வேண்டும்.எல்லாருமே சாஸ்ரியைத்தான் கேட்கின்றார்கள். ஆனால் யாரிடமாவது சமஸ்ரியை அல்லது அதைவிட உயர்வான ஒரு தீர்வைப் பெறுவதற்கான வழிவரைபடம் உண்டா? தமிழரசுக் கட்சிக்கு ஆங்கிலப் பெயர் சமஸ்ரிக் கட்சி என்பதுதான்.ஆனால் செல்வநாயகம் காலத்தில் இருந்து இன்றுவரையிலும் 73 ஆண்டுகளாக சமஸ்ரியைப் பெற முடியவில்லை.கட்சியின் புதிய தலைமை அதற்குரிய வழிவரைபடத்தை தெளிவாக முன் வைக்குமா ?
அந்த வழிவரைபடத்தின் அடிப்படையில் தமிழரசியலை வழிநடத்தத் தேவையான தகைமை;கொள்ளளவு;தியாக சிந்தை;விசுவாசம் போன்றன தமிழரசுக் கட்சிக்குள் உள்ள எந்தத் தலைவரிடம் உண்டு?அப்படி ஒரு தலைவரிடம் எல்லா தகமைகளும் இல்லையென்றால், பல்வேறு வகைப்பட்ட ஆளுமைகள் இணைந்த இணைத்தலமையை உருவாக்கலாம்.அதுதான் இப்போதிருக்கும் நடைமுறைச் சாத்தியமான ஒரே வழி.இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ஜோதிலிங்கம் ஏற்கனவே தமிழரசுக் கட்சிக்குக் கூட்டுத் தலைமை வேண்டும் என்று கூறியிருக்கிறார்.அதற்கு அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியை உதாரணமாக காட்டியிருக்கிறார்.தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் வேறு வேறு கட்சிகள் இணைந்தன. அதனால் அக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டுத் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள்.ஆனால் தமிழரசுக் கட்சி ஒரே கட்சி.அங்கே ஒருவர் மற்றவரை விட தன்னை மேலானவராக கருத முற்பட்டதன் விளைவாகத்தான் போட்டோ போட்டிகள் ஏற்பட்டன. எனவே ஒரே கட்சிக்குள் இணைத் தலைமைகளை ஏற்றுக் கொள்வது என்பது உயர்ந்த பட்ச ஜனநாயகம் ஆகும். 2009 க்குப்பின் தோன்றிய தமிழ் மக்கள் பேரவையும் இணைத் தலைமைகளைக் கொண்டிருந்தது என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
இணைத் தலைமையை ஏற்றுக்கொள்வது என்பது,தன்னிடம் இல்லாத தகுதி வேறு யாரிடமோ இருக்கிறது என்பதனை ஏற்றுக் கொள்வதுதான்.சட்டப் புலமை,ஆங்கில அறிவு போன்ற தகுதிகள் மட்டும் தலைமை தாங்கப் போதுமானவை அல்ல.போராட்டப் பாரம்பரியமும் பலமான வாக்கு வங்கியும் மட்டும் தலைமை தாங்கப் போதுமானவையல்ல.2009க்குப் பின்னரான தமிழ்த் தலைமைகளுக்கு அதைவிடக் கூடுதலாக,பண்புருமாற்றத்திற்குத் தேவையான தகமைகள் அதிகம் வேண்டும். பண்புருமாற்றம் என்பது கட்சித் தலைமையை கைப்பற்றுவதற்காக மற்றவர்களைச் சுதாகரித்து;தமிழ்த் தேசிய முகமூடி அணிந்து; நடிப்புக்கு உறவு பாராட்டுவது அல்ல.
ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு பின்னரான மிதவாத அரசியலுக்குத் தேவையான;பிராந்திய மற்றும் பூகோள நிலைமைகளைப் பொருத்தமாகக் கையாளத் தேவையான;புதிய தொழில்நுட்ப வளர்ச்சியை உள்வாங்கி;புதிய மாற்றங்களுக்கு தயாரான; தலைமைகளே தமிழ் மக்களுக்குத் தேவை. தமிழரசுக் கட்சி அதற்குத் தயாரா?
2023முடியும்போது காணாமல்போகச் செய்யப்பட்டவர்களுக்கான போராட்டம் 2500ஆவது நாளைக் கடந்திருக்கிறது.மயிலத்தமடுவில் மேச்சல் தரையை மீட்பதற்கான போராட்டம் நூறாவது நாளைக் கடந்திருக்கிறது.சமஷ்ரிக் கட்சி அதாவது தமிழரசுக் கட்சி சமஸ்ரியை அடையத் தவறிய 73ஆவது ஆண்டு கடந்திருக்கிறது.புதிய ஆண்டு தமிழரசுக் கட்சியின் 74ஆவது தோல்வியாண்டாக அமையுமா?அல்லது,கடந்த ஒரு நூற்றாண்டு காலத் தோல்வியில் இருந்து கற்றுக்கொண்ட ஆண்டாக அமையுமா?