வடக்கில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளநிலையில் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என வடமாகாண பிரதிப் காவற்துறை மா அதிபர் மஹிந்த குணரத்ன தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜூன் மாத காலப்பகுதிக்குள் வடக்கில் போதைப்பொருள் ஒழிக்கப்படும். போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் நுகர்வு ஆகியவற்றில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கையால் வடக்கில் 90 சதவீதம் குற்றச் செயல்கள் சடுதியாகக் குறைந்துள்ளன.
குற்றச் செயல்களில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் தொடர்புடையவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
பதில் காவற்துறை மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் செயற்பாடுகளை ஒழிப்பதை இலக்காகக் கொண்டுள்ளனர். அதற்குரிய நடவடிக்கைகள் வடக்கிலும் முன்னெடுக்கப்படுகின்றது.
போதைப்பொருள் விற்பனை செய்வோர் தொடர்பாக 0718598834 (யாழ்ப்பாணம்), 0718598835 (காங்கேசன்துறை), 0718598836 (வவுனியா), 0718598837 (மன்னார்), 0718598838 (கிளிநொச்சி), 0718598839 (முல்லைத்தீவு) என்ற இலக்கங்களுக்குத் தெரியப்படுத்த முடியும்.
இந்த இலக்கங்களுக்கு அழைப்பெடுப்பவர்களின் விவரங்கள் தெரியவராது. அதனால் அச்சமின்றி தகவல்ளை வழங்க முடியும். அத்துடன் வடமாகாண பிரதி காவற்துறை மா அதிபர் காரியாலயத்திலும் நேரடியாக முறையிடலாம் என மேலும் தெரிவித்தார்.