Home இலங்கை ”பங்கமில்லாத வாழ்வுபெறப் பொங்கலை மண்பானையில் கொண்டாடுவோம்”

”பங்கமில்லாத வாழ்வுபெறப் பொங்கலை மண்பானையில் கொண்டாடுவோம்”

by admin

தமிழர் பண்பாடும் உடல் நலமும் பங்கமில்லாத வாழ்வுபெறப் பொங்கலை மண்பானையில் கொண்டாடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

தைப்பொங்கலில் மண்பானைகளின் முக்கியத்துவம் பற்றி பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அலுமினியம் மிகவும் இலேசானது. உலோகம் ஆகையால் இலகுவில் வெப்பத்தைக் கடத்த வல்லது. இதனால், சமையலை விரைந்து முடிக்க வல்லது. நெளிந்து வளைந்தாலும் உடைந்துவிடாது, ஒப்பீட்டளவில் விலை மலிவானது. இவை போன்ற காரணங்களால் சமையல் அறைகளில் பிரதான பாத்திரங்களாக அலுமினியப் பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

அலுமினியப் பாத்திரங்களில் உணவு சமைக்கும்போது அலுமினியம் உணவுடன் சேர்வதைத் தவிர்க்கும் பொருட்டுப் பாத்திரத்தின் உட்பகுதியில் அலுமினியம் ஒட்சைட்டுப் படலம் இடப்படுகிறது.

அலுமினியப் பாத்திரங்களைத் தேய்த்துச் சுத்தம் செய்யும்போது பாதுகாப்புப்படலம் தேய்வடைந்து உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுகிறது.

மேலும், சமைக்கப்படும் உணவுப் பொருளின் அமிலகார இயல்பு, சேர்க்கப்படும் உப்பு சமையல் வெப்பநிலை ஆகியனவற்றைப் பொறுத்து அலுமினியம் கரைந்து உணவுடன் கலப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

உடலுடன் சேரும் அலுமினியம் மூளை நரம்புகளைப் பாதிப்பதுடன் ஏற்கனவே சிறுநீரக நோயுடையவர்களின் சிறுநீரகங்களை மேலும் பாதிப்படையவும் செய்கிறது என மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

மட்பாத்திரங்கள் அவற்றின் மேற்பரப்பில் இயற்கையாகவே உள்ள நுண்துளைகள் ஊடாக வெப்பத்தைப் பரவி உணவைச் சீராக வேகவைக்கிறது. மெதுவாகவே சூடுபடுத்துவதால் உணவில் போசணைப்பொருட்களின் அழிவு தவிர்க்கப்படுகிறது. மண் கார இயல்பு கொண்டதால் உணவில் அமிலத் தன்மையை சமன் செய்கிறது. சமைக்கும்போது மண்ணிலிருந்து கனியுப்புகள் உணவிற்கு விடுவிக்கப்படுவதால் உணவு கூடுதல் போசணைப்பெறுமானம் பெறுகிறது.

மேலும் உணவின் வாசனையுடன் மண்ணின் வாசனையும் சேர்ந்து உணவுக்குக் கூடுதல் சுவையையும் தருகிறது.

எதனையுமே அவசரகதியில் செய்துவிடத் துடிக்கும் நாம் உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டிய சமையலையும் அவ்வாறே விரைந்து முடிக்கத் தலைப்பட்டு உலோகப் பாத்திரங்களை நாடியுள்ளோம். இதன் விளைவாக நோயின் வாய்ப்பட்டும் வருகிறோம்.

மட்பாண்டங்களுக்கு முழுமையாகத் திரும்புதல் இயலாததாக இருக்கலாம். எனினும் தமிழ் மக்களின் இயற்கையைப் போற்றும் தைப்பொங்கல் திருநாளிலாவது மண்பானைகளில் பொங்கல் இடுவோம். இது நலிவடைந்துள்ள மட்பாண்டக் கைவினைஞர்களது வாழ்வு வளம்பெறவும் உதவும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More