யாழ்ப்பாணம் – மண்டைதீவு காவலரண் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைதான இருவர், பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நால்வரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள ஊர்காவற்துறை காவற்துறையினரின் காவலரண் மீது நேற்று முன்தினம் புதன்கிழமை (10.01.24) இரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இருவரை காவற்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (11.01.24) முற்படுத்தினர்.
அதன் போது, போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வுக்கு அனுப்பிய சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவும், ஏற்கனவே காவற்துறைஉத்தியோகஸ்தர் ஒருவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்ததாகவும், இதன் பின்னணியில் “புலிக்குட்டி” என்பவரின் குழு செயற்பட்டதாகவும , கைது செய்யப்பட்ட இருவரும் ” புலிக்குட்டி” குழுவை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, கைது செய்யப்பட்ட இருவரும் , அவர்களின் நண்பர் ஒருவரின் பதிவு திருமணத்தை முன்னிட்டு , வீடொன்றில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்த போதே கைது செய்யப்பட்டனர் எனவும், காவற்துறையினர் கூறும் புலிக்குட்டி என்பவரை இவர்களுக்கு தெரியாது என மன்றுரைத்தார்.
அதனை தொடர்ந்து இரு சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல ஊர்கவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த ஊர்கவற்துறை காவற்துறையினர் நேற்றைய தினம் வியாழக்கிழமை சம்பவம் தொடர்பில், மேலும் நால்வரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்,